வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக  33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ள முறைமை குறைபாடுகளுடன் கூடியது.

அதனால், அந்த குற்றப் பத்திரிகையை வலுவிழக்கச் செய்து உத்தரவிடவும் எனக்  கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலரும் பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் முன்வைத்த  மேன் முறையீட்டை நிராகரித்த  அந் நீதிமன்றம், குறித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்றின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் இம்மேன்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டே இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது அம் மனுவை தள்ளுபடி செய்வது என உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்ப்ட்ட குறித்த மேன் முறையீட்டை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள்  நீதியரசர் சிசிர டி ஆப்றூ தலைமையிலான நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன,  விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய  ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழு முன்னிலையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.