ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பேன் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஞமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளமைக்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றால் ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் வடபகுதி டெட் சீ ஆகியவற்றின் மீது இஸ்ரேலின் இறைமையை பயன்படுத்துவேன் என நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

என்னால் மேற்கு கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களையும் இணைத்துகொள்ள முடியும் ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான சமாதான திட்டத்திற்காக காத்திருக்கவேண்டியுள்ளது என  பெஞ்ஞமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

எனினும் தேர்தலின் பின்னர் உடனடியாக  இஸ்ரேல் இறைமையை பயன்படுத்த கூடிய பகுதியொன்றுள்ளது அவை ஜோர்டான் பள்ளத்தாக்கும் டெட் சீயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரஜைகளாகிய உங்களிடமிருந்து தெளிவான ஆணை கிடைத்தால் நான் அதனை செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்திற்கு ஜோர்தான் துருக்கி சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அராபிய லீக்கும் இதனை கடுமையாக கண்டித்துள்ளதுடன் இது ஆபத்தான விடயம் என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் அவ்வாறானதொரு நடவடிக்கையில் ஈடுபட்டால் அது யுத்த குற்றத்திற்கு சமனானதாக அமையும் என  பாலஸ்தீன இராஜதந்திரி  சயீப் எரெகாட் தெரிவித்துள்ளதுடன் சமாதானத்திற்கான வாய்ப்பை இது முடிவிற்கு கொண்டுவந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

1967 முதல் மேற்குகரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள போதிலும் இன்னமும் தனது நாட்டுடன் அதனை இணைத்துக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனியர்கள் தங்கள் சுதந்திர நாடு அந்த பகுதியை உள்ளடக்கியதாக அமையும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.