(நா.தனுஜா)

நாடு மிக மோசமான யுத்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்த போதுகூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அந்தவகையில் ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது என்று ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருக்கிறார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து, அதற்குத் தனது கண்டனத்தை வெளியிட்டு ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஊடக விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி உங்கள் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட பின்னர், செயற்திறனற்ற நிர்வாகத்தினால் நஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிர்வாகிகளை நீக்கி, பொருத்தமானதும் திறமையானதுமான தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும்கூட, அப்போதெல்லாம் நீங்கள் ஒவ்வொரு காரணங்களைக்கூறி அதற்கு இடையூறு ஏற்படுத்தினீர்கள். 

உண்மைக் காரணங்கள் இவ்வாறானதாக இருக்கையில் கடந்த 9 ஆம் திகதி 2140/2 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஊடகத்துறை அமைச்சிற்குக் கீழிருந்து நீக்கி, பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டு வந்திருப்பதானது முரண்பாடானதொரு விடயமாகவே உள்ளது. 

வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக, நாடு மிக மோசமான யுத்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்த போதுகூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்தவகையில் உங்களுடைய இத்தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது என்பதே என்னுடைய அபிப்பிராயமாகும். 

ஊடகத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும் உயர்வான ஊடக ஒழுக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குமே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்ததாக நீங்கள் வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும் கடந்த 4 வருடகாலத்தில் இவ்விடயத்தில் நீங்கள் எவ்விதத்திலும் தலையீடு செய்திருக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். அதேபோன்று உயர்வான ஊடக கலாசாரமொன்றை ஏற்படுத்த விரும்புகின்ற நீங்கள், குறைந்தபட்ச ஒழுக்கத்தையேனும் அனுசரித்து குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்பாக ஊடகத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்கு இவ்விடயத்தை அறியத்தருவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமை குறித்து மிகுந்த கவலையடைகின்றேன்.