இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் திஸர பெரேரா ஆகியோருக்கு மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இம் மாத இறுதியில் இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் திசர பெரேரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையிலேயே கடந்த 4 ஆம் திகதி மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமான கரீபியின் இருபதுக்கு - 20 பிரிமியர் லீக் போட்டிகளில் இவர்கள் இருவரும் கலந்து கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஒரு தேசிய அணி வீரர் தேசிய சுற்றுப் பயணத்தின்போது, அந்த அணிக் குழாமிலிருந்து தாமாக விலகினால், அவர் ஏனைய நாடுகளில் இடம்பெறும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.