(எம்.மனோசித்ரா)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், இன்று  திங்கட்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பதவி உயர்வு, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அவை குறித்து கவனம் செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுதத்தினால் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ளடங்கும் குடிவரவு - குடியகழ்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் , மோட்டார் வாகன திணைக்களம் , நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலாளர் காரியாலங்கள் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் ஆகியவற்றில் எவ்வித சேவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அரச திணைக்களில் சேவை பெறுவதற்காக வருகை தந்திருந்த மக்கள் , தாம் நீண்ட நேரம் காத்திருந்தும் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், முன் அறிவித்தல் இன்றி அரச அதிகாரிகள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் விசனம் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அல்லது அரசாங்கத்தால் பதிலேதும் வழங்கப்படாவிட்டால் நாளைய தினமும் வேலை நிறுத்தத்தை தொடர தீர்மானித்துள்ளதாகவும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.