ஆசஸ் தொடரின் நான்கவாது டெஸ்டின் போது ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தி கோசமிட்டமை குறித்தும் பெண்களை பாலியல் ரீதியில் வர்ணித்தமை குறித்தும் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் கவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஸ் ஊடகங்கள் இரசிகர்களின் இவ்வாறான நடவடிக்கை குறித்து கவலை வெளியி;ட்டுள்ள நிலையிலேயே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் கவலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சரிற்கு எதிராக ரசிகர்கள் குழுவொன்று இனரீதியான பாடலொன்றை பாடியதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் அதிருப்தியடைந்து மைதானத்திலிருந்து வெளியேறினார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது குடும்பத்தவர்களுடன் நான்காவது டெஸ்டை பார்க்க சென்ற எட்மார்ஸ் என்பவர் ரசிகர்கள் சிலரின் நடவடிக்கை காரணமாக கடும் சீற்றமடைந்து மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

நான்கு நபர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர் என லான்கசர் கிரிக்கெட் கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த ரசிகர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜொவ்ரா ஆர்ச்சரை இனரீதியில் கேலி செய்யும் பாடலை அவர்கள் பாடத்தொடங்கிய வேளையே நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன் என அந்த ரசிகர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதன் பின்னர் அவர்களது நடவடிக்கை மிகவும் மோசமானதாக மாறியது பெண் ரசிகர்களை இலக்குவைத்து அவர்கள் ஆபாசமாக கோசமெழுப்பினர் எனவும் அந்த ரசிகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் கட்ச்களை தவறவிட்டால் அவர்களை ஓரினச்சேர்க்கையாளர் என அழைத்தனர்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இதனை அங்கிருந்த அதிகாரியொருவரிடம் முறையிட சென்றவேளை அவர் அதனை கவனத்தில் எடுக்கவில்லை,நான் டுவிட்டரில் பதிவு செய்தேன் அதற்கும் உரிய பதில் இல்லை அதன் பின்னரே நான் மைதானத்திலிருந்து வெளியே தீர்மானித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நான்காவது டெஸ்டின் போது பார்வையாளர்கள்குழுவொன்று சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து ஆழ்;ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மைதானங்களில் இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.