சீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" கொள்கை என்றால் என்ன?

Published By: Daya

10 Sep, 2019 | 04:39 PM
image

 - ஸ்டான்லி ஜொனி

ஹொங்கொங்கில் 13 ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சீனக்குடியரசின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" என்ற பல தசாப்தக் கொள்கை மீது கவனத்தைக் குவித்திருக்கின்றன.

ஹொங்கொங்கின் அரசாங்கம் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சித்ததையடுத்து ஏப்ரலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் வீதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஹொங்கொங்கின் சுயாட்சியை அவமதிப்பதன் மூலம் இந்தக் கொள்கையை மீறுவதற்கு பெய்ஜிங் முயற்சிக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். சீனா அதன் தலையீட்டை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பும் அதேவேளை, அவர்களைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருக்கும் பெய்ஜிங் ஹொங்கொஹ் மீதான அதன் சுயாதிபத்தியத்திற்கு வரக்கூடிய எந்தவொரு சவாலையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறது.

 எனவே 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" என்ற இந்த அணுகுமுறை என்ன என்பதைப் பார்ப்போம்.

கொள்கையின் தோற்றுவாய்

இதனைச் சுலபமாகச் சொல்வதென்றால், முன்னாள் காலனிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவூ விசேட நிர்வாகப் பிராந்தியங்கள் மக்கள் சீனக்குடியரசின் அங்கமாக இருக்கின்ற அதேவேளை சீனப்பெருநிலப்பரப்பில் இருக்கின்றதையும் விட வேறுபட்ட பொருளாதார மற்றம் அரசியல் முறைமைகளைக் கொண்டிருக்கலாம் என்பதே அர்த்தமாகும்.

ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கை 1970 களின் பிற்பகுதியில் சீனாவின் ஆட்சியதிகாரத்தைத் தன்கையில் எடுத்துக்கொண்ட உடனடியாக டெங் சியாவோபிங்கினால் முதலில் முன்வைக்கப்பட்டது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கையின் கீழ் சீனாவையும், தாய்வானையும் ஒன்றிணைப்பதே டெங்கின் திட்டமாக இருந்தது. தாய்வானுக்கு உயர்ந்த சுயாட்சியை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். பிறகு சீனாவின் தேசியவாத அரசாங்கம் (ஷியாங்கே ஷேக் தலைமையிலானது) உள்நாட்டுப்போரில் 1949 இல் கம்யூனிஸ்டுக்களால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தாய்வானுக்குத் தப்பியோடி அங்கிருந்து செயற்பட்டார்.

டெங்கின் திட்டத்தின் கீழ் தாய்வான் தீவு அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையைத் தொடர்ந்து பின்பற்றலாம், தனியான நிர்வாகமொன்றை நடத்தி சொந்த இராணுவத்தையும் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றைச் சீனாவின் சுயாதிபத்தியத்தின் கீழேயே செய்யவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த யோசனையை தாய்வான் நிராகரித்துவிட்டது. தாய்வான் மீதான தனது உரிமைகோரலை பெய்ஜிங் ஒருபோதும் கைவிடவில்லை என்ற போதிலும் அந்தத் தீவு சீனப் பெருநிலப்பரப்பிலிருந்து தனியானதொரு ஆட்சி நிர்வாகமாகவே இயங்கிக்கொண்டு வருகிறது.

 காலனிப் பிராந்தியங்களின் மீள்வருகை

ஹொங்கொங்கையும், மக்காவூவையும் முறையே நிர்வகித்து வந்த பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது, ஒரு நாட்டிற்குள் இரு சமூக அமைப்பு முறைகள் என்ற யோசனை மீண்டும் வெளிக்கிளம்பியது.

 முதலாவது அபினி யுத்தத்திற்குப் பிறகு 1842 ஆம் ஆண்டில் பிரிட்டன் ஹொங்கொங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 1898 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கமும், சீனாவின் ஜிங் அரசவம்ச ஆட்சியும் இரண்டாவது பீக்கிங் சாசனத்தில் கைச்சாத்திட்டன. 

அந்த சாசனம் புதிய பிராந்தியங்கள் என்று அறியப்பட்ட ஹொங்கொங்கை சூழவுள்ள தீவுகள் 99 வருடக் குத்தகைக்கு பிரிட்டனின் கட்டப்பாட்டின் கீழ் வருவதற்கு அனுமதித்தது. இந்தக் குத்தகை 1997 இல் காலாவதி யாகும் போது தீவுகளை சீனாவிற்குத் திருப்பிக் கையளிப்பதாக பீக்கிங்கிற்கு லண்டன் வாக்குறுதி அளித்தது. மறுபுறத்தில் மக்காவூ 1557 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயரினால் ஆட்சி செய்யப்ப ட்டுவந்தது. 1970 களின் நடுப்பகுதியில் அவர்கள் படைகளை வாபஸ்பெற ஆரம்பித்தார்கள்.

 1980 களில் டென் சியாவோபிங்கின் சீனா இரு பிராந்தியங்களினதும் பொறுப்பைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் யோசனையின் கீழ் பிராந்தியங்களில் சுயாட்சி முறையை மதிப்பதாக பெய்ஜிங் உறுதியளித்தது. 1984 டிசம்பர் 19 ஆம் திகதி பெய்ஜிங்கில் சீனாவும், ஐக்கிய இராச்சியமும் சீன – பிரிட்டிஷ் கூட்டுப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டன. இந்தப் பிரகடனம் பிரிட்டனின் குத்தகை காலாவதியாவதைத் தொடர்ந்து 1997 இல் சீனாவிற்குக் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஹொங்கொங்கில் நடைமுறையிலிருக்க வேண்டிய சுயாட்சிக்கும் சட்ட, பொருளாதார மற்றும் அரசாங்க முறைமைகளுக்கான நிபந்தனைகளை வகுத்திருந்தது.

அதேபோன்றே 1987 மார்ச் 26 ஆம் திகதி மக்காவூ விவகாரம் தொடர்பில் சீனாவும் போர்த்துக்கல்லும் கூட்டுப்பிரகடனம் ஒன்றில் கைச்சாத்திட்டது. பெய்ஜிங்கிற்கு மக்காவூ கையளிக்கப்பட்ட பிறகு அந்தப் பிராந்தியத்துக்கான நிர்வாக அமைப்பு முறைகள் தொடர்பில் அதேபோன்ற உறுதிமொழிகளை சீனா வழங்கியது.

 ஹொங்கொஹ் 1997 ஜுலை முதலாம் திகதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் வந்தது. மக்காவூவின் சுயாதிபத்தியம் 1999 டிசம்பர் 20 இல் கைமாற்றப்பட்டது. இரு பிராந்தியங்களும் சீனாவின் விசேட நிர்வாகப் பிராந்தியங்களாக மாறின. அவை தமக்கென சொந்த நாணயத்தையும், பொருளாதார மற்றும் சட்ட முறைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் பாதுகாப்பும், இராஜதந்திரமும் பெய்ஜிங்கினாலேயே தீர்மானிக்கப்படும். அவற்றின் மினி அரசியலமைப்புக்கள் 50 வருடங்களுக்கு, அதாவது ஹொங்கொங்கிற்கு 2047 ஆம் ஆண்டு வரையும், மக்காவூவிற்கு 2049 வரையும் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவில்லை.

 

தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்

 அண்மைய வருடங்களில் ஹொங்கொங் நகரின் சுயாட்சியை பலவீனப்படுத்துவதற்கு சீனா மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு சிவில் சமூகத்திடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி வளர ஆரம்பித்தன. இது பெய்ஜிங்கினால் தெரிவு செய்யப்படும் ஹொங்கொங் அரசாங்கத்திற்கும், இளைஞர்களுக்குமிடையே பதட்டத்தை உருவாக்கியது.

2016 – 2017 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்த 6 சட்டசபை உறுப்பினர்கள் தடை செய்யப்பட்டார்கள். 2018 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்துவந்த உள்ளுர் கட்சியான ஹொங்கொங் தேசிய கட்சி தடை செய்யப்பட்டது. இவ்வருடம் ஹொங்கொங்கின் பிரதம ஆட்சியாளர் கெரி லாம் உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தைப் பிரேரித்தார். இந்தச் சட்டமூலம் ஹொங்கொங் நாடு கடத்தல் உடன்படிக்கைகளைக் கொண்டிராத பகுதிகளுக்கு ஹொங்கொங்வாசிகளை நாடு கடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டமூலம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிபணிந்து செயற்படுகின்ற நீதித்துறை காணப்படுகின்ற சீனப் பிரதான நிலப்பரப்பிற்கு பெய்ஜிங்கை விமர்சிப்பவர்களை ஹொங்கொங் அரசாங்கம் நாடு கடத்துவதற்கு அனுமதிக்குமென அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றார்கள்.

 இதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூண்டன. உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தை இடைநிறுத்துவதற்கு கேரி லாம் தீர்மானித்த பின்னர் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. பொலிஸாருடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமூலம் முறைப்படி வாபஸ் பெறப்பட வேண்டுமென்றும், கேரி லாம் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும், ஹொங்கொங்கின் தேர்தல்முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது கூறுகின்றார்கள். (த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21