ஸ்ரான்லி ஜொனி 

கடந்தவாரம் ( 6/9 ) தனது 95 வயதில் மரணமடைந்த சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி றொபேர்ட் கபிரியேல் முகாபே முரண்நிலையான ஒரு மரபை விட்டுச்செல்கிறார்.சிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தின்போது முக்கியமான கெரில்லாக்கள் பிரிவொன்றின் தலைவராக அவர் இருந்தார்.பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடி நாட்டில் பிரிட்டனின் ஆதரவுடனான சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அவர்  சிம்பாப்வேயின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதமராக வந்தார்.ஆனால், அவரின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் படுமோசமான வீழ்ச்சியைக் கண்ட அதேவேளை,அவர் கட்டியெழுப்பிய அரசாங்கம், ஒரு கட்சி ஒடுக்குமுறை ஆட்சியை நிறுவியது. முகாபேயின் மரபை பற்றிய எந்தவொரு ஆய்வும் அவரின் இந்த பல முகங்கள் மீதான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.

விடுதலை வீரர்

1960 களின் முற்பகுதியில் முகாபே அரசியலில் இணைந்தபோது ஜோஷுவா தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியே (National Democratic Party) தென் ரொடீஷியாவில் ( சிம்பாப்வே அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டது ) காலனித்துவ ஆதிக்கத்துக்கு  எதிரான பிரதான சக்தியாக விளங்கியது.கானாவின் சுதந்திர தலைவர் குவாமே என்குருமாவினதும் மார்க்சியம் -- லெனினிசத்தினதும் செல்வாக்கிற்கு ஆட்பட்ட முகாமே தேசிய ஜனநாயக கட்சிக்குள்  முற்போக்கான ஒரு பிரிவில் இணைந்துகொண்டார். பின்னர் அந்த பிரிவு  கட்சியல் இருந்து பிளவுபட்டு சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய  ஒன்றியத்தை( Zimbabwe African National Union -- ZANU)  ) அமைத்தது. அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்ததயைடுத்து வெள்ளையர் அரசாங்கம்  முகாபேயை 1964 ஆம் ஆண்டில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்தது.ஒரு தசாப்தத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர் நாட்டை விட்டு தப்பியோடினார்.ஆனால், இயக்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை.மொசாம்பிக்கில் இருந்த வண்ணம் விடுதலைப் போரில்   'சானு' வின் இராணுவப் பிரிவான சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய விடுதலை இராணுவத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். 

அந்த போரில் இயன் சிமித்தின் காலனித்துவ அரசாங்கத்துக்கு இரு பிரிவுகள் --  எதிராக முகாபேயின் சானுவும் அவரின் நேச அணியாக இருந்து பிறகு போட்டியாளராக மாறிய ஜோஷுவா என்கோமோ தலைமையிலான கட்சியான சிம்பாப்வே ஆபிரிக்க மக்கள் ஒன்றியத்தின் ( Zimbabwe African People's Union -- ZAPU) ஆயுதமேந்திய பிரிவும் -- சண்டையிட்டன.

1970 களின் பிற்பகுதியில், போரில்  வெற்றியடையமுடியாது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்ததும்  அரசாங்கம் சர்வஜன வாக்குரிமை உட்பட அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.1979 பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கமும் சிம்பாப்வேயில் இருந்த அதன் நேச சக்திகளும் கெரில்லாக்களும் லங்காஸ்ரர் மாளிகை ( Lancaster House Agreement ) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை அடுத்து விடுதலைப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.1980 மார்ச்சில் நடத்தப்பட்ட தேர்தலில் முகாபேயின் சானு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ; அவர் பிரதமராக வந்தார். முகாபே பதவியேற்ற வைபவம் இனவெறிக்கும் காலனித்துவ ஆதிக்கத்துக்கும் எதிரான ஆபிரிக்க இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புரட்சிகரமான தருணமாக நோக்கப்பட்டது.கெரில்லாக்கள் மத்தியில்  செல்வாக்குமிகுந்தவராக இருந்த பொப் மார்லே ஹராரேக்கு பயணம் செய்து ஹோட்டல் ஒன்றில் இரவோடிரவாக தங்கியிருந்து அந்த  பதவியேற்பு வைபவத்தில் பாடினார்.

சீர்திருத்தவாதி 

முகாபே ஆரம்பத்தில் பல நலன்புரி திட்டங்களை --  குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் துறைகளில் நடைமுறைப்படுத்தினார்.வெள்ளை சிறுபான்மையினத்தவர்களுடன் இணக்கப்போக்கை கடைப்பிடித்த அவர் நாட்டை விட்டு அவர்கள் வெளியேறுவதை ஊக்கப்படுத்தவில்லை.சமத்துவமின்மை பிரச்சினையைக் கையாளுவதை நோக்கமாகக்கொண்டு அவர் தனது பேரார்வத்துக்குரிய நிலச்சீர்திருத்த திட்டத்தை முன்னெடுத்தார்.தொடக்கத்தில் அந்த திட்டம் " விரும்பி விற்பனை செய்பவரும் விரும்பி வாங்குபவரும் " என்ற ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்தது.ஆனால், உறுதியளிக்கப்பட்டது போன்று அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை.சுதந்திரத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்த நிலையிலும் கூட நாட்டின் அரைவாசி நிலங்கள் வெள்ளைச் சிறுபான்மையினத்தவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததே அதற்கு காரணமாகும்.

2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் தீவிரவாத ஆதரவாளர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலவந்தமாக விவசாய நிலங்களை கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.முகாபே அதை விவசாய நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கும் நாட்டின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் மத்தியில் கடுமையான  வறுமையையும் நிலமின்மையையும் கையாளுவதற்குமான முற்போக்கான ஒரு திட்டமாகவே பார்த்தார்.ஆனால், அந்த திட்டம் சரியான முறையில் சிந்தித்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.அதனால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.கைப்பற்றப்பட்ட நிலங்களில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செம்மையான திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை.வன்முறையுடனான நிலச்சீர்திருத்தம் நாட்டின் விவசாய உற்பத்தித்திறனை குன்றச்செய்தது.அதன் விளைவாக உணவுத்தட்டுப்பாடும் பொருளாதார அவலமும் ஏற்பட்டது. 1998 தொடக்கம் 2008 வரை நாட்டின் விவசாய விளைபயன் 60 க்கும் அதிகமான சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டது.

சர்வாதிகாரி

முகாபே கட்டியெழுப்பிய முறைமை அவரைச்சுற்றி செயற்பட்டுக்கொண்டிருந்தது.முதலில் அவர் தன்னை சானு கட்சியின் கேள்விக்கிடமின்றிய தலைவராக நிலைநிறுத்திக்கொண்டார்.தனக்கு போட்டியாக  வரக்கூடியவர்களை களையெடுக்கத் தொடங்கிய அவர் சாபு கட்சியின் தலைவரான என்கோமோவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார் ; பிறகு தனது சானு கட்சியையும் சாபு கட்சியையும்  ' சானு -- மக்கள் முன்னணி ' (ZANU  PF ) என்று புதிய ஒரு அமைப்பாக ஒன்றிணைத்தார்.

1988 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைத்த முகாபே சிம்பாப்வேயின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தார்.அதற்கு பின்னர் எப்போதுமே தான் மீண்டும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை உறுதிப்படுத்திக்கொண்டார்.2002 ஆம் ஆண்டில் மாத்திரமே அவர் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் சவாங்கிராயிடமிருந்து பாரதூரமான தேர்தல் சவாலுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. முதலாவது சுற்று தேர்தலுக்கு பிறகு கைதுசெய்யப்பட்ட சவாங்கிராய் தடுப்புக்காவலில் கடுமையாக தாக்கப்பட்டார்.அதையடுத்து அவர் தேரதல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.அதனால் மீண்டும் முகாபே " வெற்றி " பெற்றார்.2016 ஆம் ஆண்டில் அவருக்கு 92 வயது. அப்போது அவர் சாகும்வரை ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டினார்.

நாசகாரர்

முகாபேயின் ஆட்சியின் பின் அரைவாசிக்காலத்தில்  சிம்பாப்வேயின் பொருளாதாரம் துரித வீழ்ச்சியைக் கண்டது.பணவீக்கம் 20 கோடி வீதமாக இருந்தது.சிம்பாப்வே மக்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.யுனிசெப் வெளியிட்ட தகவல்களின்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட சிம்பாப்வே சிறுவர்களில் சுமார் 2.1 சதவீதமானவர்கள் 2016 ஆம் ஆண்டளவில்  கடுமையான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் ; சுமார் 37 சதவீதமான குடும்பங்கள் உணவுத்தட்டுப்பாட்டினால் அவலப்பட்டுக்கொண்டிருந்தார்கள். சிம்பாப்வே மக்களின் சராசரி ஆயுட்காலம் 61 வருடங்களாக இருக்கிறது.இது போரினால் சின்னாபின்னமான கொங்கோ ஜனநாயக குடியரசின் மக்களின் ஆயுட்காலத்தை விடவும் இரு வருடங்கள் அதிகமானதாகும்.2002 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மீது  முகாபே கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையை அடுத்து மேற்கு நாடுகளினால் சிம்பாப்வே மீது விதிக்கப்பட்ட தடைகள் இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கின என்பது உண்மையே.ஆனால், சுமார் நான்கு தசாப்த காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த முகாபேயே அந்த நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு பெரிதும் பொறுப்பானவர்.

அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த முகாபே தவறினார் ; பதிலாக தனது கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதில் அதீத  பிரமைகொண்டு அவர் செயற்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து 2017 நவம்பரில் இராணுவமும் சானு -மக்கள் முன்னணியும் அவருக்கு எதிராக திரும்பின ; முகாபேயின் துணை ஜனாதிபதி எமர்சன் நங்காக்வா  அதிகாரத்தைப் பொறுப்பேற்றார்.அதை  இராணுவம் சதிப்புரட்சி என்று அழைக்கவிரும்பவில்லை. ஆனால், முகாபேயை பதவியில் இருந்து தூக்கியெயறிந்த இராணுவம் அவரை சிம்பாப்வேயில் வசிப்பதற்கு அனுமதித்தது ; உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் அவர் தொடர்ந்தும் தேசபிதா என்றே குறிப்பிடப்பட்டார்.தனது முன்னாள் ஆசானின் மரணத்தை கடந்தவாரம் நங்காக்வா தான் உலகிற்கு அறிவித்தார் ; " சிம்பாப்வேயின் தாபகத்தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான தோழர் றொபேர்ட் முகாபே காலமானார் என்பதை மிகுந்த கவலையுடன் அறிவிக்கிறேன் " என்று அவர் வெள்ளிக்கிழமை ருவிட்டரில் பதிவிட்டார்.

( த இந்து )