பெய்ஜிங்,( சின்ஹுவா ) உலகின் பல பாகங்களிலும் இப்போது மாணவர்கள் கல்வியாண்டின் புதிய பருவத்துக்கு பாடசாலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றே வாஷிங்டனில் உள்ள கடும்போக்கு வர்த்தகக் கொள்கையாளர்கள்  சீனாவுடனான தங்களது பயனற்ற வர்த்தகப் போரில் இருந்து குறைந்தது நான்கு பாடங்களை படிக்கத் தொடங்கவேண்டிய நேரமாகவும் இது அமைந்திருக்கிறது.  

 அமெரிக்காவின் உச்சபட்ச நெருக்குதல் தந்திரோபாயத்துக்கு முன்னால் சீனா வளைந்துகொடுக்காமல் நிமிர்ந்து உறுதியாக நிற்கிறது என்பது முதலாவது பாடம்.

30,000 கோடி டொலர்கள் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற புதிய மேலதிக வரிகளின் ஒரு பகுதி செப்டெம்பர்  முதலாம் திகதி நடைமுறைக்கு வந்திருக்கிறது. எஞ்சிய பகுதி வரிகள் டிசம்பர் 15 நடைமுறைக்கு வரும்.

ஆனால், பெய்ஜிங்கிடமிருந்து நியாயத்துக்கு ஒவ்வாத சலுகைகளை கறந்தெடுக்கும் நோக்கில் வாஷிங்டன் தொடர்ந்து தீவிரப்படுத்திவருகின்ற வர்த்தகத் தாக்குதல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது.அது மட்டுமன்றி, அமெரிக்காவின் பொருளாதாரப்போர் வெறிக்கு எதிரான எதிராக சீனாவின் மனவுறுதி மேலும் மேலும் அதிகரித்திருக்கிறது ; அதன் எதிர் நடவடிக்கைகள் தீர்க்கமானவையாகவும் நன்கு சிந்தித்து நிதானத்துடன் மேற்கொள்ளப்படுபவையாகவும் இருக்கின்றன. பெய்ஜிங் கைவசம் இன்னும் போதுமான நடவடிக்கைகள் இருக்கின்றன.

சீனாவின் பொருளாதாரம் வலிமையானதாகவும் தற்போதைய வர்த்தகப் போரின் விளைவான நெருக்குதலுக்கு தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு உறுதியானதாகவும் இருக்கிறது என்பது வெள்ளைமாளிகையின் வரி அதிகாரிகள் படிக்கவேண்டிய இரண்டாவது பாடமாகும்.

சீனாவுக்கு மாற்றீடான நாடுகளைக் கண்டறியுமாறு அமெரிக்கக் கம்பனிகளை தூண்டும் முயற்சிகளில் அமெரிக்காவில் உள்ள சிலர் அண்மைக்காலமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.என்றாலும் கூட அமெரிக்க முதலீடுகள் சீனாவில் இன்னமும் அதிகரிக்கின்றன என்பதே உண்மையாகும்.

இந்த வருடத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்க கம்பனிகள் 680 கோடி டொலர்களை முதலீடு செய்தன ; அது முன்னைய இரு வருடங்களிலும் இதே காலப்பகுதியில் செய்யப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க முதலீட்டை விடவும் 1.5 சதவீத அதிகரிப்பாகும் என்று ' றொங்டிங் கொன்சல்ரிங் ' என்ற நியூயோர்க் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. அந்த முதலீட்டு முயற்சிகளில் ஒன்று ' ரெல்சா ' கம்பனி ஷங்காயில் தொடங்கிய அதன் உலக ' சூப்பர் ஃபாக்டரி' யாகும்.

இவ்வாறாக அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் சீனா உலகின் மிகவும் குடிநெருக்கமான பாவனையாளர் சந்தையைக் கொண்டிருப்பதேயாகும். சீனாவின் சனத்தொகையில் 40 கோடி மக்கள் நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளினால் வகைப்படுத்தப்பட்ட சகல கைத்தொழில்து றை வகைகளையும் கொண்ட உலகின் ஒரே நாடு என்ற வகையில், பல்தேசியக் கம்பனிகளுக்கு முழுநிறைவான கைத்தொழில் சங்கிலித்தொடரையும் விநியோகச் சங்கிலித் தொடரையும் சீனாவினால் வழங்கக்கூடியதாக இருக்கிறது ; தொழில் முயற்சிகளுக்கான செலவும் சீனாவில் குறைவாகவே இருக்கிறது.முன்னுணரக்கூடிய எதிர்காலத்தில்  வேறு எந்த நாட்டினாலுமே வழங்க இயலாத ஒரு அனுகூலமாக இது அமைந்திருக்கிறது.

தற்சமயம் சீன அரசாங்கம் புலமைச்சொத்துடமை உரிமைகளை பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புநிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சீனச் சந்தைகளை முதலீட்டாளர்கள் அடையக்கூடிய வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதிலேயே நாட்டம் காட்டுகின்றது.இந்த புதிய சீர்திருத்தங்களும் திறந்தபோக்கு நடவடிக்கைகளும் சீனாவில் தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உலகம் பூராவுமிருந்து கூடுதல் வர்த்தக வாய்ப்புக்களைக் கொண்டுவரும்.

தங்களது வர்த்தகப் போர் அமெரிக்க மக்களையும் வர்த்தகத்துறையையும் பாதிக்கவில்லை என்று கூறுவதை வாஷிங்டனின் வர்த்தக கடும்போக்காளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இதுவே அவர்கள் படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.

சீன இறக்குமதிகள் மீது இறுதியாக விதிக்கப்பட்ட வரிகள் முன்னர் நேரடியாக இலக்குவைக்கப்பட்டிராத பொருட்களை முதற்தடவையாக தாக்கப்போகின்றன ; அமெரிக்கா துவக்கிவைத்த வர்த்தக மற்றும் வரி தகராறு துணிவகைகள், உடுப்புகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற குடும்ப பாவனைப் பொருட்களின் விகைளை நேரடியாகவே அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

புதிய வரிகள் நடைமுறைக்கு வந்தபிறகு சீனப்பொருட்களின் மீதான சகல வரிகளின் காரணமாகவும் அமெரிக்க குடும்பங்கள் வருடாந்தம் சுமார் 1000 டொலர்களை மேலதிக செலவிடவேண்டியிருக்கும் ; வரிகளை மேலும் அதிகரிக்கப்போவதாக விடுத்துவரும் அச்சுறுத்தலை வாஷிங்டன் நடைமுறைப்படுத்தினால், அந்த மேலதிக செலவு வருடாந்தம் 1500 டொலர்களாக இருக்கும் என்று ஜே.பி.மோர்கன் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

சீனாவுடனான தற்போதைய வர்த்தகப்போர்  வணிக முதலீட்டையும் தயாரிப்பையும் ஊக்கங்கெடச் செய்துகொண்டுமிருக்கிறது.இவ்வருடத்தின் இலண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மறு ஆயவுசெய்து 2 சதவீதத்துக்கு மாற்றியமைத்ததாக அமெரிக்க வர்த்தக திணைக்களம் கடந்த வாரம் கூறியிருந்தது. கடந்த மாதம் செய்த மதிப்பீடு 2.1 சதவீதமாக இருந்தது.

இறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், பொறுப்புவாய்ந்த ஒரு உலக வல்லரசாக எவ்வாறு  நடந்துகொள்வது என்பதை அமெரிக்கா கற்றுக்கொள்ளவேண்டும்.அத்துடன் பாடசாலைகளில் மற்றைய மாணவர்களுடன் வீறாப்புத்தனமாக நடந்துகொள்ளும் பெருத்த உருவம் கொண்ட மாணவனைப் போன்று நடந்துகொள்வதை வாஷிங்டன் நிறுத்தவேண்டும். உலகின் ஒரே வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா தனக்கேயுரிய பொறுப்புக்களை தோளில் சுமக்கவேண்டியது அவசியமாகும் ; உலகை கூடுதல் சுபிட்சம் நிறைந்ததாக மாற்றுவதில் ஏனைய நாடுகளுடன் இணைந்துகொள்ளவேண்டும். அப்போது தான் அமெரிக்கா மீண்டும் மகத்தானதாக வரமுடியும்.