குயின்ஸ்லாந்திலும் நியுசவுத்வேல்சிலும் மூண்டு காட்டு தீ உக்கிரமானதாக மாறத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்களை அதிகாரிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இரு மாநிலங்களிலும் 138 ற்கும் அதிகமான காட்டுதீக்கள் மூண்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியுசவுத்வேல்ஸில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பகுதியில் 58 காட்டுதீக்கள் மூண்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12 ற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயினால் எரிந்து சாம்பலாகிவிட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் தீயணைப்பு படைவீரர்களின் பெரும் முயற்சியையும் பாராட்டியுள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் சன்சைன் கோஸ்டில் மூண்டுள்ள காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் 300 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்களின் மிகக்கடுமையான முயற்சி காரணமாக பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என குயின்ஸ்லாந்தின் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களை  பின்பற்றுமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சன்சைன் கோஸ்டின் பெரேஜியன் கடற்கரை பகுதியில் மூண்டுள்ள தீ தொடர்ந்தும் கட்டுக்கடங்காததாக காணப்படுகின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரேஜியன் கடற்கரை மார்கஸ் கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் வெளியாட்கள் எவரையும் அங்கு செல்லவேண்டாம் என கேட்டுள்ளனர்.

இதேவேளை மூண்டு காட்டு தீயில் எட்டு காட்டு தீ குறித்து சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் விளையாட்டு காரணமாகவே சில தீக்கள் மூண்டுள்ளன  இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்