காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள  ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை  எதிர்கொள்ளவேண்டிவரும் என தெரிவித்துள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் புயல்கள் உருவாகின்றன,பேரலைகள் தீவுகளை கரையோரா நகரங்களை மூழ்கடிக்கலாம்,எங்கள் காடுகளில் தீ மூண்டுள்ளது,பனி உருகின்றது நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரி;த்துக்கொண்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புவிவெப்பமடைதல் உலகில் பட்டினி நிலையை அதிகரித்துள்ளதை ஐநா புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030 முதல் 2050 வரையான காலப்பகுதியில் புவி வெப்பமடைவதன் காரணமாக போசாக்கின்மை, நோய்கள் காரணமாக வருடாந்தம் 250,000 உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உலகம் மனித உரிமைகளிற்கு இவ்வாறான ஆபத்து ஏற்பட்டதை ஒரு போதும் சந்தித்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது எந்த நாடும் எந்த அமைப்பும் எந்த கொள்கை வகுப்பாளரும் வேடிக்கை பார்ப்பதற்கான தருணமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.