பி.ஆர்.தீபக்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மோடி அரசாங்கம் கொண்டுவந்த பிரேரணையை பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நிறைவேற்றியதை அடுத்து அந்த மாநிலத்துக்கு இதுவரை விசேட அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் 370 வது உறுப்புரை  6 ஆகஸ்ட் 2019 இந்திய ஜனாதிபதியால்  ரத்துச் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

ஆகஸ்ட் 6 பெய்ஜிங்கில் செய்தியாளர் மகாநாட்டில் இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷுன்யிங், " சீன - இந்திய எல்லையின் மேற்குப் பிரிவில் உள்ள சீனப் பிராந்தியத்தை இந்தியா தனது நிருவாக நியாயாதிக்கத்திற்குள் கொண்டுவந்ததை சீனா எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. இந்த நிலைப்பாடு நிலையானது ; ஒருபோதும் மாறவில்லை. அண்மையில் உள்நாட்டுச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்ததன் மூலம் இந்தியத் தரப்பு சீனாவின் ஆட்புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து சேதப்படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை ஏற்புடையதல்ல. எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எல்லை விவகாரத்தில் நிதானத்துடனும் முன்மதியுடனும் செயற்படுமாறும் இரு தரப்புகளுக்கும் இடையில் காணப்பட்ட பொருத்தமான இணக்கப்பாடுகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுமாறும் எல்லை விவகாரத்தை மேலும்  சிக்கலாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் இந்திய தரப்பை நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் " என்று குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சின் அறிக்கையுடன் எல்லாமே முடிந்துவிடவில்லை. " 7 ஷங்காய்களுக்கு சமமான சீனப்பிராந்தியமான லடாக்கை இந்தியா ஒருதலைப்பட்சமாக இந்திய அரசியல் வரைபடத்திற்குள் இணைக்கிறது " என்று சீன ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. சில ஊடகங்கள் லடாக்கை 40 ஹொங்கொங்களுக்கு சமமானது என்று கூறின.

சீன கல்விமான்கள் கூட விழுந்தடித்துக்கொண்டு வேறுபட்ட விளக்கங்களை தந்தார்கள். " வலிமையான கட்டுப்பாட்டை பலப்படுத்திக்கொள்வதையும் இந்தியா  பலம்பொருந்தியது என்ற  கருத்துரு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதையும் இந்து தேசியவாத மறுமலர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதே ஜம்மு -- காஷ்மீரில் புதுடில்லி மேற்கொண்ட நடவடிக்கை " என்று சமகால சர்வதேச உறவுகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த ஹூ ஷிசெங் கூறினார்.

தங்களது உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த சில அரசியல்வாதிகளும் உயர்ந்தோர் குழாமும் வன்செயல்களில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டியிருக்கக்கூடும் ; மிதவாதிகள் தீவிரவாதிகளுடன் இணைந்துகொண்டிருக்கக்கூடும் ;சுதந்திரத்தை நாடும் சில தீவிரவாதச் சக்திகள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் ஹூ, எவ்வாறெனினும் இறுதியில் வழமை நிலை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

சர்வதேச கற்கைகளுக்கான ஷங்காய் நிறுவனத்தின் ஆய்வாளரான ஷாவோ கான்ஷெங் எழுதிய கட்டுரையொன்றில் சற்று கடுநந்தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்." இந்திய அரசாங்கம் ஜனரஞ்சக அரசியலுக்கு வசப்பட்டுவிட்டது என்று கூறியிருக்கும் அவர் " சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லையின் மேற்குப்பிரிவில் இதுகாறும் இருந்துவந்த நிலையை  ஜம்மு -- காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கை மலினப்படுத்திவிட்டது.இது சீனாவுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது " என்று தெரிவித்திருக்கிறார்.அவர் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே மீளவலியுறுத்தியிருக்கிறார்.

லடாக் முழுவதையும் சீனப்பிராந்தியம் என்று ஷாவோ குறிப்பிடவில்லை.ஆனால், அப்பிராந்தியம் வரலாற்றில் திபெத்தின் ஒரு துணைப்பிராந்தியமாக இருந்தது என்று கூறுகிறார். அத்துடன் 33,000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடைய சர்ச்சைக்குரிய அக்சாய் ஷின் சீனாவின் நியாயாதிக்கத்தின் கீழானது என்றும் அவர் கூறுகிறார்.அவரின் அபிப்பிராயத்தின்படி அரசியலமைப்பை திருத்தியதன் மூலமும் லடாக் யூனியன் பிரதேசத்தை உருவாக்கியதன் மூலமும் மேற்குப்பிரிவில் சர்ச்சைக்குரிய எல்லையோரம் இதுகாறும் இருந்துவந்த நிலைவரத்தை இந்தியா உண்மையில் ஒருதலைப்பட்சமாக மாற்றிவிட்டது.

இந்திய - பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து காஷ்மீரின் சில பகுதிகளை இந்தியா இணைத்துக்கொண்டது என்று கூறும்போது ஷாவோ பிராந்தியத்தின் வரலாற்றைத் தெரியாதவராகவும் காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை வேண்டுமென்றே அலட்சியம் செய்பவராகவும் நடந்துகொள்கிறார் என்றே கூறவேண்டியிருக்கிறது .அவரைப் பொறுத்தவரை, புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய செயல் சீனாவுக்கு ஒரு அவமதிப்பேயாகும். இதே முறையிலேயே 1987 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அருணாச்சல பிரதேசத்தையும் உருவாக்கிக்கொண்டது என்று அவர் கூறுகிறார்.

சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த லாங் ஜயாங்ஸு ஆகஸ்ட் 15 சைனா டெயிலி பத்திரிகையில் எழுதிய இன்னொரு கட்டுரையில் " 370 உறுப்புரையை ரத்துச் செய்ததன் மூலமாக இந்தியா பல பிரச்சினைகள் கிளம்பக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்துவிட்டது.பிராந்தியத்தின் நிருவாகப்பிரிவை ஒருதலைப்பட்சமாக  மாற்றியமைத்து, பாகிஸ்தானிய, சீனப் பிராந்தியங்களை கைப்பற்றிய இந்தியாவின் நடவடிக்கை இரு அயல்நாடுகளுக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இரு தரப்புகளில் இருந்தும் வலிமையான எதிர்வினையை சந்திக்கவேண்டியிருக்கும் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் செயல் பிராந்தியத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் என்று காஷ்மீரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியா தவறுக்கு இடங்கொடுக்கக்கூடியதாக அசட்டையாக நடந்துகொண்டுள்ளது என்று குறைகூறினார். அவ்வாறு கூறும்போது அவர் சின்ஜியாங் மாகாணத்திலும் 1950 களில் தொடங்கி திபெத்திலும் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் சீனா மேற்கொண்டுவருகின்ற காரியங்களை மறந்தவராக நடந்துகொள்கிறாார்.

காஷ்மீரின் தற்போதைய நிலைவரம் அமைதியின்மைக்குள்ளாகியிருக்கும் அந்த பிராந்தியத்தில் புதிய சுற்று வன்செயல்களை மூளவைக்கக்கூடும்.அதன் விளைவாக தோனறக்கூடிய இடர்மிகு பாதுகாப்பு நிலைவரம் தெற்காசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது லான்  ஜயாங்ஸுவின் அபிப்பிராயமாக இருக்கிறது.

வீறாப்பான தேசியவாதபோக்குடைய ' குளோபல் ரைம்ஸ் ' பத்திரிகையில் வெளியான கட்டுரைகளையும் அதன் ஆசிரியர் ஹூ சிஜின் தெரிவித்த " காஷ்மீரின் சுயாட்சியை  முற்றாக நீக்குவதற்கு இந்தியா எவ்வாறு துணிச்சல் கொண்டது என்று எமக்கு தெரியவில்லை " என்பன போன்ற கருத்துக்களையும் பற்றி பேசத்தேவையில்லை.காஷ்மீருக்கு ' விசேட அந்தஸ்தை ' கொடுத்தது இந்தியாவே தவிர, வேறு எந்த நாடும் அல்ல என்பதையும் அந்த விசேட அந்தஸ்து தற்காலிக தன்மை கொண்டதே என்பதையும் சீன ஊடகங்களும் கல்விமான்களும் தெரிந்துகொள்ளவேண்டும். சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீது நம்பிக்கையில்லாமல் இருந்த ஒரு நேரத்தில் அந்த சபைக்கு காஷ்மீர் பிரச்சினையைக் கொண்டுசென்றது இந்தியா தான். பாகிஸதானிய ஆக்கிரமிப்புக்குள்ளான காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற்றுவதற்கு உதவுவ ஐ.நா. தவறிய காரணத்தினால், இந்தியா இருதரப்பு அணுகுமுறையில் பெருமளவுக்கு நம்பிக்கைவைக்கத் தொடங்கியது.அந்த நம்பிக்கை 1972 சிம்லா உடன்படிக்கையின் மூலமாக வெளிக்காட்டப்பட்டது.

இரு தரப்புத் தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிப்பதை விடுத்து பாகிஸ்தான் ஜாய்ஷ் -- ஈ -- முஹம்மத், லக்ஷர் - ஈ- தாய்பா , ஜமாத் - உத் - தாவா போன்ற பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கியதன் மூலம் அரச கொள்கையின் கருவியாக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தது. இந்த பின்னணியிலேயே, காஷ்மீரில் விரும்பத்தக்க விளைபயனைத் தராத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே பொருத்தமானது என்று இந்தியா தீர்மானித்தது.  இதே பின்னணியில்தான் ( கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்ற ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாவது உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தவேளையில் ) வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரிடம் 370 வது உறுப்புரையை ரத்துச்செய்வது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அதனால் வெளி எல்லைப்புறத்துக்கோ அவ்லது சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கோ எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார்.

இந்தியா அளித்த பதிலினால் திருப்திப்படாத சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியினால் எழுதப்பட்ட கடிதத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையி்ல் மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  முன்வைத்தது.ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இருந்த போதிலும் அந்த கூட்டத்துக்குப் பிறகு ஐ.நா.வுக்கான சீனத்தூதுவர் ஷாங் யுன் ' ஜம்மு -- காஷ்மீர் நிலைவரம் குறித்தும் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் கடுமையான கவலை வெளியிட்டதாக ' ஊடகங்களிடம் கூறினார்.  ஜம்மு -- காஷ்மீர் நெருக்கடி சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தகராறு என்றும் அதனால் அதற்கு பொருத்தமான பாதுகாப்புச்சபை தீர்மானங்கள், ஐ.நா. சாசனம் மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் தீர்வுகாணப்படவேண்டும் என்று பெய்ஜிங்கில் வைத்து குரேஷி சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜியிடம் கூறியதை ஷாங் யுன்னும் திரும்ப வலியுறுத்தினார்.இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இதுகாறும் இருந்த நிலைவரத்தை மாற்றிவிட்டது என்றும் அதனால் பதற்றம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா.வுக்கான  இந்தியாவின் தூதுவரும் பாதுகாப்பு சபைக்கான நிரந்தர  பிரதிநிதியுமான சயீத் அக்கருதீன் மிகவும் சரியாக சுட்டிக்காட்டியதைப் போன்று ' இரு அரசுகள் ( சீனாவும் பாகிஸதானும் ) அவற்றின் சொந்த கருத்துக்களை சர்வதேச சமூகத்தின் விருப்பமாக காண்பிக்க முயற்சிக்கின்றன '.

இந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையிலான குரோதத்தை சீனா தனக்கு அனுகூலமான முறையில் 1965, 1971, 1999, 2019 ஆண்டுகளின் பயன்படுத்திக்கொண்டது என்பது வெளிப்படையானது. இப்போது உறுப்புரை 370 ரத்துச்செய்யப்பட்ட பின்னர் தோன்றியிருக்கும் நிலைவரத்தையும் அவ்வாறே பயன்படுத்த முயற்சிக்கிறது.அணுத்தொழில்நுட்பம் உட்பட பெருமளவில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்குவதன் நோக்கம் ஒரு புறத்தில் இந்தியாவை உபகண்டத்துக்குள் மடக்கிவைத்திருப்பதும் மறுபுறத்தில் தன்னை ' ஒரு உயர்ந்த ஒழுக்கப்பண்புடைய ' நாடாகக்காட்டி மத்தியஸ்த பங்கை வகிப்பதற்குமாகும்.

சீனா எதிர்காலத்திலும் இவ்வாறு தொடர்ந்து செய்யக்கூடும்.ஆனால், ஐ.நா.விலும் காஷ்மீரிலும் தனக்கு ஒரு இடைவெளியைத் தந்த 370 வது உறுப்புரை இனிமேல் இல்லை என்பதையும் சீனா அறியும். இப்போது இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ; அதில் தலையிட சீனா முயற்சிக்குமேயானால், திபெத், சின்ஜியாங் நெருக்கடிகள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை அது  கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டும்.

இறுதியாக, கன்பூசியஸின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், " உனக்குச் செய்யவிரும்பாதவற்றை மற்றவர்களுக்கு செய்யக்கூடாது".

( பி.ஆர்.தீபக் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார் )