மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான தலைவராக கிரேன் பொல்லார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் தலைமைப் பொறுப்பினை ஏற்று வழி நடத்தவுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக ஜேசன் ஹொல்டரும், இருபதுக்கு -20 போட்டிகளுக்கான தலைவராக பிரித்வெய்ட்டும் செயற்பட்டு வந்தனர்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் ஆடிய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்று, 9 ஆம் இடத்தை பிடித்தது.

அது மாத்திரமல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவுசெய்து கொள்ளமுடியாமல் திணறிப் போனது.

இந் நிலையிலேயே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த அணியின் தலைவர்களை மாற்ற அந் நாட்டு கிரிக்கெட் நிறுவனம் முடிவுசெய்தது. 

இதையடுத்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கு தலைவராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார் பொல்லார்ட். அதன் பிறகு அவரை அணியில் சேர்க்கவில்லை. இருபதுக்கு - 20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். 

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் மாத்திரமே அவர் அதன் பிறகு சேர்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.