(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடை யிலான சந்திப்பு இன்று செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையிலுமான   நடவடிக்கையினை அலரி மாளிகைக்கு அருகில் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கட்டும் என்று   இன்றைய பேச்சு வார்த்தையின்போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவிடம் தெரிவிக்கவுள்ளதாக அலரி மாளிகையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு சனிக்கிழமை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அன்றைய தினம் பெரும்பாலும் வேட்பாளர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளராகும் எதிர்பார்ப்புடன் அமைச்சர் சஜித் பிரேமதாச பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக பதுளையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்திலிருந்து இன்று வரை ஆதரவாளர்களை ஒன்றுக்கூட்டி பல கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் என முன்னெடுத்து வருகின்றார். ஆகவே ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பினை விட்டுக்கொடுக்கும் நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லை.  

 எனினும்   எக்காரணம் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சியின் வேட்பாளராக வேண்டாம் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயாரான  ஹேமா பிரேமதாச உள்ளிட்ட நெருங்கியவர்கள் பலரும் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே முடிந்தளவு ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிலையே தற்போது சஜித் பிரேமதாசவிற்கு காணப்படுகின்றது.

ஆனால் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகும் பட்சத்தில் அடுத்து வர கூடிய பிரதமர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கும் வகையிலும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று இடம்பெற கூடிய ரணில் - சஜித்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.