இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாகிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

திமுத் கருணாரட்ன, தினேஸ் சந்திமல், அஞ்சலோ மத்தியுஸ், சுரங்க லக்மால், நிரோசன் டிக்வெல, குசல் ஜனித் பெரோ, தனஞ்சய டி சில்வா, திசார பெரேரா, லசித் மலிங்க, அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர்.

பாகிஸ்தான் தொடரிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களிற்கு தெளிவுபடுத்துவதற்காகவும் பாகிஸ்தான் செல்வதற்கு அவர்கள் தயராகயிருக்கின்றார்களா என்பதை அறிவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதியும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பாதுகாப்பு ஆலோசகருமான ரொசான் குணதிலக பாகிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை அணியினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது மேற்குறிப்பிடப்பட்ட பத்து வீரர்களும் பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாகிஸ்தானில் ரி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அணியை தெரிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.