நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், கதாசிரியர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் யூகி சேது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார்.

‘கவிதை பாட நேரமில்லை ’என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் யூகி சேது. அதற்குப்பின் ‘மாதங்கள் ஏழு’ என்ற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனராகவும் வலம்வந்தார் .அதன் பிறகு குணச்சித்திர மற்றும் கொமடி கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பஞ்சதந்திரம்’, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ரமணா’ ஆகிய படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றார் யூகி சேது.

உலகத்திரைப்பட விழாக்களில் பங்குபற்றி தன்னுடைய திரைப்பட ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ளும் யூகி சேது, அஜித் நடித்த ‘வில்லன்’ மற்றும் ‘ஆசை ’ படங்களின் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார் . நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட அதிலும் குறிப்பாக நையாண்டிதனமான நகைச்சுவையை வழங்குவதில் தன்னிகரற்ற யூகிசேது தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கதையின் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பதிவில்,‘ திறமையான இயக்குனருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறேன்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.

யூகிசேதுவின் இயக்கத்தில் உருவாகும் படம் திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே யூகிசேது திரைப்படத்தை இயக்கவில்லை என்றும், கவிதாலயா நிறுவனத்திற்காக இணையத் தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.