(எம்.ஆர்.எம்.வஸீம்)

எமது ஆதரவாளர்களை பலப்படுத்தவே நாங்கள் மக்கள் பேரணிகளை ஏற்படுத்துகின்றோமே தவிர கட்சியை பிளவுபடுத்துவதற்கல்ல எனத் தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, எவ்வாறு இருப்பினும் சஜித் பிரேதமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் வரை எமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி குறைவடைந்து மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருந்த கட்டத்தில் கட்சியை பலப்படுத்த 2014 ஆம் ஆண்டு கட்சியின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்து மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினேன். அதன் மூலம் எமது ஆதரவாளர்களுக்கு புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி, 2015 பொதுத்தேர்தலில் கட்சியை வெற்றிபெறச்செய்ய சக்தியை ஏற்படுத்தினோம்.

அதனால் தற்போது எமது கட்சி ஆதரவாளர்களை பாதுகாக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. அதனை தலைவர் ரணில் விக்ரமசங்க வழங்கவேண்டும் என கைகூப்பி கேட்கின்றேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.