(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மீறி தான் எந்த சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜய சூரிய மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பவர்களில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. நான் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும், செயற்குழு உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற ரீதியிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளிக்க தீர்மானித்துள்ளேன். இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சி யாப்பை மீறி செயற்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ஐ.தே.க பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த ஆகஸ்ட் மாதம் அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அதற்கிணங்க இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியிருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.