கோதுமை மாவை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்  விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பாவனையாளர் விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.  பௌஸர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள், 1977 என்ற தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்புகொண்டு, அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.  இதேவேளை, கோதுமை மாவை அதிக விலையில் விற்பனை செய்த 50 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும், பாவனையாளர்  விவகார அதிகார சபையின் அனுமதியின்றியே விலை அதிகரிக்கப்பட்டது.

   அத்தியவசியப் பொருளாக கோதுமை மா, பெயரிடப்பட்டதன் பின்னர் தமது அனுமதியின்றி அதன் விலையை அதிகரிக்க முடியாது. இதன் பிரகாரம், தொடர்ந்தும் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும்.

   தமது அனுதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளாகவும், திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

   450 கிறாம் நிறையுடைய பாணின் விலை,  (06) நள்ளிரவு முதல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

   கோதுமை மாவின் விலை அதிகரித்ததால், பாணின் விலையையும்  அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.