தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டுள்ள நிலையில் தற்­போது சமஷ்டி கோரிக்கை முடிந்த முடி­வா­கி­விட்­டது. இதனை கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும் நன்கு அறிவார். ஆகவே, பெரும்பான்மையினரின் குற்றங்களை தொடர்ந்து கூறுவதை விடுத்து எமது தரப்பு குற்றங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது தமிழர் விடு­த­லைக்­ கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- அண்­மைக்­கா­லத்தில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் இயங்கு நிலை எவ்­வா­றுள்­ளது?

பதில்:- தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் எமது கட்­சியை முடக்­கி­விட்­டுள்­ளனர். அது திட்­ட­மிட்ட ஒரு சதி­யாகும். எமது கட்­சி­யா­னது பெருந் தலை­வர்­களால் உரு­வாக்­கப்­பட்­டது. ஆகவே மிக நேர்­மை­யா­கவும், புனி­த­மா­க­வுமே மக்கள் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­கின்றோம். ஏற்ற இறக்­கங்­களை சந்­தித்­தாலும் எமது கொள்­கையில் உறு­திப்­பாட்­டுடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­த­லொன்­றுக்­கான முன்­னா­யத்­தங்­களில் பிர­தான கட்­சிகள் கள­மி­றங்­கி­யுள்ள நிலையில் உங்­க­ளது நிலைப்­பாடு என்­ன­வாக உள்­ளது?

பதில்:- நாங்கள் சம­கால நிலை­மை­களை அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். தமிழ் மக்­களின் சார்­பாக தென்­னி­லங்கை தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய விட­யங்­களை நாம் கொண்­டி­ருக்­கின்றோம். அடுத்­து­வ­ரு­கின்ற காலத்தில் அவற்றை முன்­னி­லைப்­ப­டுத்தி பேச்­சுக்­களை முன்­னெ­டுப்போம். தற்­போ­து ­வ­ரையில் எவ்­வி­த­மான முடி­வு­க­ளையும் அறி­விக்­க­வில்லை.

கேள்வி:- தாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டு வரு­கின்றோம் என்ற மன­நி­லையில்  தமிழ் மக்கள் இருக்­கின்ற நிலையில் அவர்கள் இத்­தேர்­தலை எவ்­வாறு அணுக வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ் மக்கள் ஏமாற்­றப்­ப­டு­கின்­றார்கள் என்று நீங்கள் கூறு­கின்­றீர்கள். ஆனால், தமிழ் மக்­களை அவர்­களின் தலை­வர்கள் தான் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பது தான் பொருத்­த­மா­ன­தாக இருக்கும். 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி, பொதுத்­தேர்தல் நடை­பெற்­ற­போது, கூட்­ட­மைப்பு தெளி­வாக தமிழ் மக்கள் சார்ந்த நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்க வேண்டும்.

ஆனால், அதனை செய்­யாது, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வி­யையும் விட அதி­கா­ர­முள்ள தேசிய நிறை­வேற்று சபையில் உறுப்­பு­ரி­மையைப் பெற்­றார்கள். ஆனால் அத­னைப் ­ப­யன்­ப­டுத்தி எதை­யுமே செய்­ய­வில்லை. அதற்­குப்­பின்­னரும் எத்­த­னையோ சந்­தர்ப்­பங்கள் ஏற்­பட்­ட­போதும் அர­சாங்­கத்­தினை முன்­ந­கர்த்த ஒத்­து­ழைத்­தார்­களே தவிர, தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சாங்­கத்­தினை தமது வழிக்குள் கொண்­டு­வர முயற்­சிக்­கவே இல்லை.

கேள்வி:- நிபந்­த­னை­களை விதிக்­கின்­ற­போது அவை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டு­ விடும். மேலும் தென்­னி­லங்­கையில் எதிர்ப்பு பிர­சா­ரங்­களும் தலை­தூக்கும் சாத்­தி­யப்­பா­டுகள் இருந்­தன. அத்­த­கைய நிலைமை ஏற்­பட்டால் பிர­தான விட­யங்­க­ளுக்கு தீர்­வினை எட்­ட­மு­டி­யாத நிரந்­த­ர­மான சூழ­லொன்று உரு­வா­கி­விடும் என்­பதால் கூட்­ட­மைப்பு பகி­ரங்க நிபந்­த­னை­களை விதிக்­காது விட்­டி­ருக்­க­லா­மல்­லவா?

பதில்:-  இந்தக் கார­ணத்­தினை நியா­ய­மா­ன­தாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

சம்­பந்தன் இன்று நேற்று அர­சி­ய­லுக்கு வந்த ஒருவர் அல்ல. நீண்­ட­கா­ல­மாக முழு­நேர அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கின்றார். சமஷ்டி கோரிக்­கையை ஒரு­போதும் தென்­னி­லங்கை தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் என்­பது உறு­தி­யா­கி­விட்­டது.  இதனை சம்­பந்­தனும் நன்கு அறிந்­துள்ளார்.

காரணம், 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் சமஷ்டியை ஏற்­றுக்­கொண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிப்­ப­தற்கு பதி­லாக அவரை தோற்­க­டித்து ஒற்­றை­யாட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்­திய மஹிந்த ராஜ­ப­க் ஷவை வெற்­றி­பெற வைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பே முன்­னின்று செயற்­பட்­டது. சமஷ்­டியை முன்­னி­லைப்­ப­டுத்­திய ரணி­லுக்கு தமிழ் மக்­களின் வாக்­கு­க­ளின்றி 48.43சத­வீத வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன.

இத்­த­கை­யதொரு சந்­தர்ப்­பத்­தினை நழு­வ­விட்ட பின்னர் இனி என்­றுமே சமஷ்­டி­கோ­ரிக்கை சாத்­தி­ய­மாகப் போவ­தில்லை. இதனை சம்­பந்தன் உணர்ந்­துள்ளார். விக்­னேஸ்­வரன் தற்­போது சமஷ்டி என்று கூறி­வ­ரு­வதால் எது­வுமே நடக்­கப்­போ­வ­தில்லை. சமஷ்டி முடிந்த முடி­வா­கி­விட்­டது. இதற்கு தமிழ்த் தலை­மை­களே கார­ண­மா­கின்­றனர். ஆகவே பெரும்­பான்மை தரப்பின் குற்­றங்­களை தொடர்ந்து கூறு­வதை விடுத்து எமது தரப்பின் குற்­றங்­களை சீர்­தூக்கி பார்க்க வேண்டும்.

கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- என்னைப் பொறுத்­த­வ­ரையில் மக்கள் சேவையில் ஈடு­படும் நான் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது சட்­டங்­களை மீறியோ குற்­றங்­களை இழைத்­து ­விட்டேன் என்றால் தேர்­தலில் அர­சி­ய­லி­லி­ருந்தே ஒதுங்­கி­வி­டுவேன். ஆனால், பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் நிலைமை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் ஜனா­தி­பதித் தேர்தல் கேலிக்­கூத்­தா­கி­விட்­டது.

கேள்வி:- மறு­பக்­கத்தில் ரணில், கரு, சஜித் இவர்­களில் யார் மீது தமி­ழர்கள் எதிர்­பார்ப்­பு­ட­னான நம்­பிக்கை கொள்ள முடியும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- அண்­மைய காலங்­களில் ஊடகச் செய்­தி­களை பார்த்­தீர்கள் என்றால் விகா­ரை­க­ளுக்கு விஜயம் செய்­வதும் மாவட்ட ரீதி­யாக 25 விகா­ரை­களை அமைப்பேன் என்று பகி­ரங்­க­மாக அறி­விப்­பதும் தான் சஜித் பிரே­ம­தா­ஸவின் செயற்­பா­டு­க­ளாக இருந்­து­வந்­துள்­ளன. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருந்தும் எத­னையும் செய்­தி­ருக்­க­வில்லை. அடுத்­த­தாக கரு­ஜ­ய­சூ­ரிய மௌன­மா­கவே இருந்து வரு­கின்றார். ஆகவே, இவர்­களில் முத­லி­ருவர் நம்­பிக்கை சார்ந்து தகை­மையை இழக்­கின்­றனர். எனினும் அவர்­களின் கொள்­கைத்­திட்­டங்­களை முன்வைக்­காது யாரை ஆத­ரிப்­பது என்று பகி­ரங்­க­ப்ப­டுத்த முடி­யாத சூழலே தற்­போ­துள்­ளது.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் பிர­தான இரு­த­ரப்­புக்­களை விடவும் மூன்­றா­வது தெரி­வா­க­வுள்ள இட­து­சா­ரித்­துவ கொள்­கை­யி­லி­ருக்கும் ஜே.வி.பி.யின் வேட்­பாளர் அநு­ர­கு­மா­ரவை ஆத­ரிப்­பது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்­திக்க முடி­யுமா?

பதில்:- மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ருக்கு சமஷ்டி முன்­மொ­ழிவை செய்­தி­ருந்தேன். அதனை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை.

பின்னர் இந்­திய அதி­கா­ர­ப­கிர்வு முன்­மொ­ழி­வை­யா­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா என்றும் கோரி­யி­ருந்தேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­றுக்­கொள்­வ­தாக பதி­ல­ளித்­தி­ருக்­க­வில்லை. இருப்­பினும், அவர்­களின் கடந்த கால கரும்­புள்­ளிகள் மறக்­க­மு­டி­யா­தவை. அந்த விட­யங்கள் இத்­த­கைய பெரும்­ப­த­விக்­காக போட்­டி­யி­டு­வ­தற்­கான தகு­தியை இழக்கச் செய்­வ­தா­கவே உள்­ளது.

கேள்வி:- தமிழ்த்­த­ரப்பில் ஜனா­தி­பதித் தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்ற வாதமும் வலு­வாகி வரு­கையில், இத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வகி­பாகம் என்­ன­வாக இருக்க வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் சார்ந்த பகு­தியில் உள்ள சொற்­ப­மா­ன­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­கு­வ­தற்கு சந்­தர்ப்­பத்­தினை வழங்­கு­கின்­றது. அபி­வி­ருத்­தியின் பெயரால் சில செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு அப்பால் தமிழ் மக்­க­ளுக்கு எதுவும் இல்லை. ஆகவே தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் அர­சாங்கம் வியா­பா­ரங்­க­ளையே செய்­கின்­றது. ஆகவே தமிழ் மக்கள் இந்த விட­யத்தில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

கேள்வி:- தமி­ழர்­களின் கோரிக்­கை­களை நிபந்­த­னை­யாக முன்­வைத்து அவற்றை ஏற்கும் நபரை ஆத­ரிக்கும் முடிவை தமிழர் தரப்பு எடுக்­க­லாமா?

பதில்:- போர் நிறைவுக்கு வந்தவுடனேயே இராணுவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து நாம் பேசினோம். ஆனால், அதனை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. 2015முதல் எத்தனையோ சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றை பயன்படுத்தியிருக்கவில்லை.

அண்மையில் ஜனாதிபதியை சந்திக்க போர்த்தேங்காய்களான சம்பந்தன், சுமந்திரன், செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் வீட்டிலிருக்க கூட்டமைப்பின் விடுகாய்கள் செல்கின்றார்கள். பின்னர் ஜனாதிபதியுடன் முரண்பட்டு வெளியேறியதாக கூறுகின்றார்கள். இது நகைப்பிற்குரிய விடயமாகும்.

முதலாவதாக அமைப்பிற்கு ஒரு தலைவர் இருக்கும்போது அவரை விட்டு இவ்வாறான பேச்சுவார்த்தையொன்றுக்கு சென்றதே மிகப்பெரும் தவறாகும். அதேநேரம் சொற்பகாலம் மட்டுமே பதவியிலிருக்கவுள்ள ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்தி நடக்கப்போவது என்ன? தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளாகும். ஆகவே பொறுமையாக தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

(நேர்காணல் - ஆர். ராம் )