தலைமைப்பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாதபோது இலங்கை வீரர்கள் பதற்றமின்றி அச்சமின்றி விளையாடுகின்றனர் என இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார்.

தலைமைப்பயிற்றுவிப்பாளர் இருக்கின்றாரா இல்லையா என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் சபை அரசியல் காரணமாக புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்றுவிப்பாளர் அழுத்தங்களிற்கு உள்ளாகின்றார், உடனடியாக வெற்றிகளை காண்பிக்குமாறு அவர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ள அசந்த டிமெல் இதன் காரணமாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் அந்த அழுத்தங்களை வீரர்கள் மீது திணிக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமைப் பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாததன் காரணமாக வீரர்கள் அழுத்தங்களற்ற நிலையில் உள்ளனர் தலைமை பயிற்றுவிப்பாளர் ஒருவர் இருந்த நேரத்தை விட இலகுவாக விளையாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு நீண்ட கால நோக்கில் தலைமைப்பயிற்றுவிப்பாளர் அவசியமா இல்லையா என்பது தெரியாது ஆனால் அவர்கள் தலைமைப்பயிற்றுவிப்பாளர் இன்றி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்கள் என குறிப்பிட்டுள்ள அசந்தடிமெல், இலங்கை அணிக்கு துடுப்பாட்ட, பந்து வீச்சு, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களே அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் லசித் மலிங்க அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் எனவும் அசந்த டிமெல் குறிப்பிட்டுள்ளார்.

மலிங்க இளம் வீரர்களுடன் நன்கு இணைந்து செயற்படுகின்றார், இளம் வீரர்களும் அவ்வாறு அவருடன் இணைந்து செயற்படுகின்றனர், சிரேஸ்ட வீரர்கள் சிலருடன் மலிங்கவிற்கு காணப்பட்ட பிரச்சினைகள் இளம் வீரர்களுடன் இல்லை எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றாக மதிய உணவிற்கு செல்கின்றனர் இளம் வீரர்கள் அவரின் பின்னால் உள்ளனர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர் இது நல்ல அறிகுறி எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிரேஸ்ட வீரர்கள் காரணமாகவே பிரச்சினைகள் காணப்பட்டன அவர்கள் அணிக்குள் தங்களுக்கென குழுக்களை உருவாக்கி வைத்திருந்தனர் எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

திசர பெரோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமல் போன்ற வீரர்களிற்கு பிரச்சினைகள் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ள அசந்த டி மெல் இந்த வீரர்களை அணியில் மீண்டும் சேர்த்தால் அதனால் அணிக்கு சாதகமான நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.