இலங்­கையில் இன்று மூன்று அர­சியல் அதி­கார மையங்­க­ளாக விளங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ ஆகியோர் கடந்­த­வாரம் நிறை­வேற்றதி­கார ஜனா­தி­பதி பதவி மற்றும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்­ப­டுத்­திய கருத்­துகள், நாடு இன்னும் இரு மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்­க­வி­ருக்கும் நிலையில் உன்­னிப்­பாக நோக்­கப்­ப­ட ­வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்­றன.

மூவ­ரையும் பொறுத்­த­வரை ஜனா­தி­பதி ஆட்­சி­முறை தொடர்­பான விவ­கா­ரத்தில் வெவ்­வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­கின்­ற­போ­திலும், தங்­களின் அர­சியல் எதிர்­காலம் என்று வரும்­போது ஒரு புள்­ளியில் அசௌ­க­ரி­யத்­துடன் என்­றாலும் சந்­திக்­கவே செய்­கி­றார்கள். அதா­வது ஜனா­தி­பதி ஆட்­சி­முறை நீடிப்­பது அவர்­களின் அர­சியல் நலன்­க­ளுக்கு தற்­போ­தைய கட்­டத்தில் அனு­கூ­ல­மாக இல்லை.

ஜனா­தி­பதி சிறி­சேன இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்கும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருப்­ப­தற்கு பல்­வேறு வியூகங்­களை நாடி­யி­ருந்­த­போ­திலும், எது­வுமே சாத்­தி­யப்­ப­டாத நிலையில், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பிறகு ஜனா­தி­ப­தி­யாக வரு­பவர் நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக இருக்­க­மாட்டார் என்றும்  முழு­மை­யான அதி­கா­ரங்­கள் பிர­த­ம­ருக்கே சென்­று­விடும் என்­பதால் ஜனா­தி­பதி வெறு­மனே பொம்மைத் தலை­வ­ரா­கவே இருப்பார் என்றும் கூறத்­தொ­டங்­கி­யி­ருக்­கிறார். கடந்­த­வாரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 68 ஆவது மாநாட்டில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, 19 ஆவது திருத்தம் கார­ண­மாக அடுத்த அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி பத­வியின் அதி­கா­ரங்கள் மேலும் கத்­த­ரிக்­கப்­படும். எந்­த­வொரு அமைச்சுப் பொறுப்­பையும் வகிக்­க­மு­டி­யா­த­வ­ராக ஜனா­தி­பதி இருப்பார்.  தற்­போது ஜனா­தி­ப­தி­யிடம் இருக்கும் பாது­காப்பு அமைச்சும் கூட பிர­த­ம­ரி­டமே போய்­விடும் என்று கூறினார். இத்­த­கைய ஒரு பொம்மை ஜனா­தி­பதி பத­வியை அடை­வ­தற்­காக ஏன்தான்  போட்­டி­போடத் தயா­ரா­கி­றார்­களோ என்று தனக்கு வியப்­பாக இருக்­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால், அதே­வேளை சுதந்­தி­ரக்­கட்சி ஜனா­தி­பதித் தேர்­தலில் தனி­யாக வேட்­பா­ளரைக் கள­மி­றக்கும் என்று அதன் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தேர்தல் ஆணைக்­குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விற்கு அறி­வித்­தி­ருக்­கிறார். அத்­துடன் சுதந்­தி­ரக்­கட்­சியின் வேட்­பா­ள­ராக வரக்­ கூ­டி­ய­வரின் பெயரும் தனக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­பதை பிர­தான  வாக்­கு­று­தி­யாக நாட்டு மக்கள் முன்­னி­லையில் வைத்து ஆட்­சிக்கு வந்­தவர் ஜனா­தி­பதி சிறி­சேன. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரை­வுச் ­செ­யன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது நிறை­வேற்று ஜனா­தி­பதி பதவி தொடர்ந்தும் இருக்­க­வேண்டும் என்று உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்ட கட்­சி­யாக அவரின் தலை­மையின் கீழ் சுதந்­திரக் கட்சி மாறிய விந்­தை­யையும் கண்டோம். இப்­போது அந்த ஜனா­தி­பதி பத­வியில் இனிமேல் ஒன்­று­மில்லை என்று கூறு­கின்ற அள­வுக்கு அவர்  சென்­றி­ருக்­கிறார். எட்­டாத பழம் நரிக்கு மாத்­தி­ரமா புளிக்­கி­றது? 19 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்து ஜனா­தி­ப­தி­ வசமிருந்த மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களை குறைத்­ததன் மூல­மாக உல­கி­லேயே தனது அதி­கா­ரங்­களை தளர்த்­து­வ­தற்கு மன­மு­வந்து முன்­வந்த ஒரே ஆட்­சி­யாளர் தானா­கவே இருக்­க ­மு­டியும் என்ற பெரு­மைக்கு, உரிமை கோரிய சிறி­சேன இன்று அதே திருத்­தத்தை பழி­தூற்­றிக்­கொண்டு திரி­கிறார்.

அதே­வேளை, ஜனா­தி­ப­தியின்  நிலைப்­பாட்­டுக்கு முற்­றிலும் முர­ணாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 19ஆவது திருத்­தத்தை வெகு­வாக புகழ்ந்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. கடந்த வாரம் மாலை­தீ­வுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அவர் அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பிறகு ஒரு நிறு­வ­னத்­தி­டமே அதி­கா­ரங்கள் குவிந்­து­கி­டக்கும் நிலைமை உரு­வா­னது என்றும் அதை தனது அர­சாங்கம் ஓர­ள­வுக்கு மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கி­றது என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

பிர­த­மரின் ஆலோ­ச­னையின் பேரில் அமைச்­சர்­களை ஜனா­தி­பதி நிய­மிப்­பதை அவ­சி­யப்­ப­டுத்­தி­யதன் மூல­மாக எமது அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்தம் நிலை­வ­ரத்தை சீர்­செய்­தி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­துக்­கான அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் கூட்­டுப்­பொ­றுப்பை அது  வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இன்று  வெஸ்ட்­மி­னிஸ்டர் பாரா­ளு­மன்ற அர­சாங்­கத்தின் முக்­கிய அம்­சங்­களும் (பத­வியில் இருந்த ஜனா­தி­ப­தி­க­ளினால் அடிக்­கடி துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டு­வந்த மட்டு­மீ­றிய அதி­கா­ரங்கள் கார­ண­மாக நாம் ஒழிப்­ப­தற்கு உறு­தி­பூண்ட) நிறை­வேற்று அதி­கார  ஜனா­தி­பதி பத­வியும்  அரு­க­ரு­காக உள­தா­யி­ருக்­கின்­றன" என்று கூறி­யி­ருந்தார். அத்­துடன், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி விளை­வு­களை பொருட்­ப­டுத்­தாமல் அதி­கா­ரங்­களை துஷ்­பி­ர­யோகம் செய்­யா­தி­ருப்­ப­தற்­காக அந்த பத­வியை இல்­லா­தொ­ழிக்­க­வேண்டும் என்­பதில் தான்  தொடர்ந்தும் உறு­தி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்­னைய ஆட்­சியின் கீழ் அர­சி­ய­ல­மைப்பு அப்­பட்­ட­மான முறையில் மீறப்­பட்­டதன் கார­ண­மா­கவே 19 ஆவது திருத்தம் அவ­சி­ய­மா­யிற்று. அர­சாங்க சேவையும் பொலிஸும் பெரு­ம­ள­வுக்கு அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யையும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வி­யதன் மூல­மாக 19 ஆவது திருத்தம் சீர்­செய்­தி­ருக்­கி­றது என்றும் மாலை­தீவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் குறிப்­பிட்டார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிக்­கப்­படும் என்று கூறிய அர­சாங்கம் ஒரு இடைக்­கால ஏற்­பா­டா­கவே 19 ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வந்து ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களில் குறைப்பை செய்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றைகள் முட்­டுக்­கட்டை நிலையை அடைந்­ததை அடுத்து ஜனா­தி­பதி ஆட்சி­முறை ஒழிப்பு இப்­போ­தைக்கு சாத்­தி­யப்­ப­டக்­கூ­டிய ஒன்று அல்ல என்ற நிலை தோன்­றி­யி­ருக்கும் கட்­டத்­தி­லேயே மாலை­தீவில் விக்­கி­ர­ம­சிங்க அந்த ஆட்­சி­முறை ஒழிப்பில் இன்­னமும் தான் உறு­தி­யாக இருப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கிறார். 

ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தென்­பது எப்­போ­துமே அந்தப் பத­வியை அடைய முன்னர் அர­சி­யல்­வா­திகள் உரக்­கப்­பே­சிய விவ­காரம். ஆனால் இது­வரையில் அது தொடர்பில் உறு­தி­மொ­ழியை வழங்கி ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வந்த எந்­த­வொரு ஜனா­தி­ப­தியும் மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களை அனு­ப­விப்­பதில் ருசி­கண்ட பின்னர் தங்கள் மனதை மாற்­றிக்­கொண்­டதே அண்­மைக்­கால வர­லாறு. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இது­கா­ல­ வரையில் ஜனா­தி­பதி பதவி வசப்­ப­டா­மலே இருந்து வரு­வ­தால்தான் அதன் ஒழிப்பு குறித்து பேசு­கிறார் போலும். அவர் ஜனா­தி­ப­தி­யாக வந்தால் (அதற்கு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலே இறுதி வாய்ப்­பாக இருக்­கக்­கூடும்) ஏனைய ஜனா­தி­ப­தி­களை விடவும் இது­வி­ட­யத்தில் வித்­தி­யா­ச­மாக நடந்து கொள்வார் என்­ப­தற்கு எந்த உத்­தர­வா­தமும் இல்லை. 

இது இவ்­வா­றி­ருக்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 19 ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் கூட நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி பலம்­பொ­ருந்­தி­ய­தா­கவே இருக்­கி­றது என்றும் அதி­கா­ரங்கள் வெட்டிக் குறைக்­கப்­பட்­ட­தனால் துவண்­டு­வி­டாமல் அர்ப்­ப­ணிப்­பு­டனும்  துணி­வாற்­ற­லு­டனும் செயற்­ப­டக்­கூ­டிய  ஒரு­வரால் உறு­தி­யான முறையில் நாட்டை முன்­னோக்கி வழி­ந­டத்­த­மு­டியும் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

 கொழும்பில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொது­ஜன  பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தா­பய ராஜ­பக் ஷ தொழில்­மு­னைவோர் குழு­வொன்­றுடன் நடத்­திய கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்சித் தலைவர், எதிர்­கா­லத்தில் ஜனா­தி­ப­தியை விடவும் அதி­கா­ரங்கள் கொண்­ட­தாக பிர­தமர் பதவியே விளங்கும் என்று ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன வெளியிட்ட கருத்து பற்றி கூறுகையில் பதவியை வகிப்பவரின் ஆற்றல்களிலேயே அதன் வலிமை தங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போன்ற ஒருவரினால் ஜனாதிபதி பதவிவசம் இப்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டே பலம்பொருந்திய ஒரு ஜனாதிபதியாக செயற்படமுடியும் என்பதையே அவர் அந்த கருத்தின் மூலம் நிறுவ முயன்றார் என்பது  வெளிப்படையானது.

இவ்வாறாக பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கும் 19 ஆவது திருத்தம் குறித்து மூன்று தலைவர்களும் தங்களது அரசியல் நலன்களுக்குப் பொருந்திவரக்கூடிய முறையில் வியாக்கியானங்களை செய்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கதை ஒருபுறம் இருக்கட்டும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு 19 ஆவது திருத்தத்தின் கதி என்னவாக இருக்கப் போகிறது? இதுகுறித்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக வரக்கூடியவர்கள் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.

-வீ.தன­பா­ல­சிங்கம்