(ஆர்.யசி)

மக்கள் எம் மீது சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் எதிர்காலத்தில் உருவாக்கும் அரசாங்கத்தில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவற்றைக் கூறினார். 

இன்று தேசிய உற்பத்தியாளர் சர்வதேச வர்த்தகத்துடன் போட்டியிட முடியாத நிலையில் தேசிய உற்பத்தியாளர் தமது உற்பத்திகளை கைவிடும் நிலைமை உருவாகியுள்ளது. ஆகவே அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை பாதுகாத்து முன்னேற்ற வேண்டும். 

அது மட்டும் அல்லாது தேசிய பாதுகாப்பு கேள்வியாக உள்ளது. இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து குறுகிய காலத்தில் சமாதானத்தை உருவாக்கி அந்த சமாதானத்தை பாதுகாத்தோம். எனினும் தற்போது துரதிஷ்டவசமாகவும், எமது பாதுகாப்பை பலவீனப்படுத்திய காரணத்தினாலும் இந்த நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்க ஆரம்பமாகியுள்ளது. 

எனவே மீண்டும் பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிகளை எடுக்கையில் மக்கள் சுதந்திரத்தை பறிக்கவே நாம் முயற்சிகளை எடுப்பதாக கூறுகின்றனர். 

அன்று நாம் யுத்தத்தை முடிக்க முன்வந்தது தமிழர்களை பாதுகாக்கவே. வடக்கு கிழக்கு பகுதிகளும் நாட்டின் ஏனைய பகுதிகளை போல் மாற்றி அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்றதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.