(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சி ஒருவரை ஜனாதிபதியாக்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். தவறவிட்டால் கைசேதப்படவேண்டிவரும். அதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். கடந்த 20 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக நியமித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2010 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தோம். அதபோன்று 2015இல் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக இறக்கி வெற்றிபெறச்செய்தோம்.

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனை தவறவிட்டால் பின்னர் கைசேதப்படவேண்டிய நிலை ஏற்படும். அதனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்து கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அதற்கு தடையாக இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச்செய்ய எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.