(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தற்போது 20 தேசிய கல்வியியற் கல்லூரிகள் காணப்படுகின்றன. இவற்றுடன் விஞ்ஞானம், கணிதம் கற்கைநெறிகளுக்காக மேலும் 2 கல்வியியற் கல்லூரிகளை நிறுவ வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் ரீதியாகவே நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது பயிற்சி பெற்று அதன் பின்னர் பரீட்சை நடத்தப்பட்டு அவற்றில் சித்தியடைந்தவர்களுக்கே நியமனம் வழங்கப்படுகிறது. 

மேலும் இரண்டு கல்வியியற் கல்லூரிகளை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதுவரையில் நாட்டில் 20 கல்வியியற் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 4,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேருக்கு அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.