ஆஷஸ் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்சஸ்டரில் நடந்து வருகிறது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஸ்டீவன் சுமித்தின் இரட்டை சதத்தோடு 497 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியுது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 ஆவது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4 ஆவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘பாலோ-ஆனை’ தவிர்க்க 298 ஓட்டங்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து விளையாடினர். 

விக்கெட் காப்பாளர் ஜோனி பெயர்ஸ்டோ 17 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 26 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் பின்வரிசை வீரர்களின் ஒத்துழைப்போடு தங்கள் அணியை ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். 

பட்லர் 41 ஓட்டத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 107 ஓவர்களில் 301 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 196 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 

டேவிட் வார்னர் தொடர்ந்து 3 ஆவது முறையாக டக்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் (6 ), லபுஸ்சேன் (11 ), டிராவிஸ் ஹெட் (12 ) உள்ளிட்டோரும் வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் ஸ்டீவன் சுமித்தும், மெத்யூ வேட்டும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.  துரிதமான ஓட்டங்களை சேகரிப்பில் கவனம் செலுத்திய ஸ்டீவன் சுமித் 82 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.மெத்யூ வேட் தனது பங்குக்கு 34 ஓட்டங்களை எடுத்து ஆர்ச்சரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்சில் 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை நிறுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின்னர் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களுடன் உள்ளது.

ஆடுகளத்தில் ஜோ டென்லி 10 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளதுடன், இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட் கையிலிருக்க 365 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுள்ளது.

இன்று போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டமாகும்.