வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கர் வளவை சேர்ந்த இருதரப்பிற்கும் இடையில் நேற்றுமுன்தினம் சிறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதன் தொடர்சியாக நேற்றையதினம் இரவு வீடொன்றிற்குள் நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், வீட்டில் நிறுத்தபட்டிருந்த முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியது.

இதேவளை அதே சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து மற்றொரு பெண் உட்பட மூவருமாக மொத்தம் 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்னர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கபடும் மதுபோதையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.