இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 யாழ்ப்பான மாநகர மண்டப கட்டிட நிர்மாணம் அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை.அதில் எவ்வித குறுகிய சிந்தனைகளும் இல்லை.நாம் ஆட்சிக்கு வந்தது முதல் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.இந்த கட்டிடத்தை அமைக்க வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்னர் நான் இங்கு வந்திருந்தேன்.இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் இணைத்து அவர்களின் கருத்துகள் அபிப்பிராயங்கள் எல்லாம் கேட்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நாடு கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்தது.நாட்டில் கிளர்ச்சி,உள்நாட்டு போர் காரணமாக பல பாதிப்புகளை சந்தித்தோம்.வடக்கில் மட்டும் மக்கள் கொன்றளிக்கப்படவில்லை.தெற்கிலும் 60 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கொன்றளிக்கப்பட்டனர்.இந்த பாதிப்புக்களினால் தமிழர்கள் அதிகமாக கனடாவிலும் சிங்களவர்கள் அதிகமாக அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

எனவே நாட்டில் உள்ளவர்கள் புலபெயர் நாடுகளுக்கு தப்பித்து செல்லாது இங்கு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.என்றார்.