சந்திராயன் 2 இன் விக்ரம் லான்டருடனான தொடர்புதுண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோவின் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள அதேவேளை இஸ்ரோவின் விஞ்ஞானிகளிற்கு அவர்களது முயற்சிகளிற்காக இந்திய அணியின் பயிற்றுவிப்பாளரும் அணித்தலைவர் விராட்கோலியும் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

விண்வெளி விஞ்ஞானத்தில் உலகின் முன்னணி நாடாக  இந்தியாவைமாற்றியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து இந்தியா பெருமைப்படுகின்றது என இந்திய அணியின் தலைமைபயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 இந்தியாவின் மில்லியன் கணக்கான சிறுவர்களிற்கான உந்துசக்தியாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விஞ்ஞானத்தில் தோல்வி என்ற எதுவுமில்லை என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள  விராட்கோலி நாங்கள் பரிசோதனை  முயற்சிகளில் இறங்குவோம் நாங்கள் வெற்றிபெறுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரவு பகலாக தொடர்ச்சியாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பெரிதும் மதிப்பதாகவும் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

தேசம் உங்களால் பெருமைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிகார் தவான் தனது டுவிட்டர் செய்தியில் இஸ்ரோ அணியின் கடுமையான முயற்சி குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கி;ன்றோம் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் தோல்வியடையவில்லை,நீங்கள் எங்களை மேலும் நிலவை நோக்கி நகர்த்தியுள்ளீர்கள் உங்கள் கனவை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருங்கள் எனவும் தவான் தெரிவித்துள்ளார்.