வவுனியா ஓமந்தை பலமோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.
வவுனியா ஓமந்தை பலமோட்டைக் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்துக் குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
இதன் போது சட்டவிரோத முதிரைக்குற்றிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப் ரக வாகனம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதன்போது வாகனத்திலிருந்தவர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
குறித்த கப் ரக வாகனத்தை மீட்ட புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் வாகனத்திலிருந்து  7 அடி நீளமுடைய 12 முதிரை குற்றிகளைக் கைப்பற்றியதுடன் அவற்றை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.