நிஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்க 100 விக்கெட்டுக்களை எடுத்து சாதனை படைத்தது மாத்திரமல்லாது ஹெட்ரிக் சாதனையையும், தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்களையும் சாய்த்து தள்ளியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 125 ஓட்டங்களை குவித்தது.

126 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த நியூஸிலாந்து அணி மூன்றாவது ஓவரை எதிர்கொண்டபோது அந்த ஓவருக்காக லசித் மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

முதல் இரு பந்துகளிலும் எதுவித ஓட்டமும் வழங்காத அவர் மூன்றாவது பந்தில் கொலின் முன்ரோவை 12 ஓட்டத்துடன் போல்ட் முறையிலும், நான்காவது பந்தில் ஹமிஷ் ரதர்போர்டை எல்.பி.டபிள்யூ. முறையில் டக்கவுட்டுடனும், ஐந்தாவது பந்தில் கிரேண்ட்ஹோமை போல்ட் முறையில் டக்கவுட்டுடனும், இறுதிப் பந்தில் ரோஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் டக்கவுட்டனும் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.

அத்துடன் இப் போட்டியில் மலிங்க மொத்தமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.