(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை  வர்த்தக கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள 8 ஆவது வர்த்தக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளைய தினம் மஹரகமவிலுள்ள தேசிய இளைஞர் மன்ற வெளியரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலாருக்குமான இந்த வர்த்தக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் சுப்பர் லீக், சம்பியன்ஷிப் மற்றும் ஏ பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதுடன்,இந்த மூன்று வகைப் பிரிவுகளிலும் 100 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்கவுள்ளன. 

இப்போட்டித் தொடரின் ஆரம்பச் சுற்று போட்டிகள் மஹரகமவிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற வெளியரங்கில் நாளை 07 ஆம் திகதியும், நாளை மறுதினம் 8 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் மற்றும் 3 ஆம் இடத்துக்கான போட்டிகள் நவம்பர் மாதம் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

இம்முறை மொத்தமாக 10 இலட்சத்துக்கும் அதிகமாக பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. தொடரின் ஒவ்வொரு பிரிவுகளின் கீழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

மேலும், இப்போட்டித் தொடரின் அதி சிறந்த பெறுமதிக்க வீரருக்கு மோட்டார் சைக்கிளும், அதி சிறந்த பெறுமதிக்க வீராங்கனைக்கு ஸ்கூட்டி வண்டியும் பரிசளிக்கப்படவுள்ளது. 

இது தவிர, சர்வதேச நடைமுறைகளை நேர்த்தியாக பின்பற்றுவதில் சிறந்த தடுப்பாளர், சிறந்த பெறுநர் என ஒவ்வொரு நிலைகளுக்குமாக கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.