(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு 5 இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹஜன சக்சத் பெரமுன, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்பன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவையே கோதாபயவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. 

அதற்கமைய சிகல பிரதேசங்களிலும் ' தேசத்தின் உயர் சக்தி : கோதாபயவை வெற்றி பெறச் செய்வோம் ' என்ற தொனிப் பொருளின் கீழ் கூட்டங்களை நடத்துவதற்கும் இக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 

பாராளுமன்ற உறுப்பினரும் மஹஜன சக்சத் பெரமுனவின் தலைவருமான தினேஷ் குணவர்தன , நாட்டை வீணடித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைக் கவிழ்த்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்திற்குள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டு நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது என்பது மறுக்க முடியாத விடயமாகும். 

இவ்வாறான ஸ்திரமற்ற தன்மையிலிருந்து நாட்டை மீட்கக் கூடிய நபர் கோதாபய என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே தான் நாம் அவருக்கு எமது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம். எமக்கு மாத்திரமின்றி சகல இன மக்களும் இது போன்ற பொறுப்பு காணப்படுகின்றது என்றார்.