தமயந்தி என்ற படத்தின் மூலம் நடிகை குட்டி ராதிகா மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

‘இயற்கை’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. அதற்குப்பிறகு வர்ணஜாலம், உள்ள கடத்தல் என சில படங்களில் நடித்து அதன் பிறகு கன்னட படங்களில் தீவிர கவனம் செலுத்தி, அங்கு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதன் பிறகு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்டு திரை உலகில் இருந்து விலகினார். பிறகு திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டார் .சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகும் ‘தமயந்தி’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் நாவரசன் இயக்குகிறார். படத்தைப்பற்றி இவர் தெரிவிக்கையில்,

“ இந்த கதையை முதலில் நடிகை அனுஷ்காவிடம் சொல்லி நடிக்குமாறு கேட்டேன். அவரிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால், அதன் பிறகு நடிகை குட்டி ராதிகா அவர்களிடம் கதையைச் சொன்னேன். அவர்களுக்கு கதை பிடித்துப் போனது. அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார்கள். இந்த கதை அருந்ததீ, பாஹ்மதி போன்று அமானுஷ்யங்களுடன் கூடிய பேய் படம்.

இந்த படத்தில் கதையின் நாயகியாக பொருத்தமான கதாபாத்திரத்தில் குட்டி ராதிகா நடித்திருக்கிறார்கள். இருவேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதையில் அவர் மகாராணியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் தமயந்தி படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.” என்றார்.

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘தமயந்தி’யாக தமிழ் ரசிகர்களை சந்திக்க வரும் குட்டி ராதிகாவை வரவேற்போம்.