இங்கிலாந்துடனான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீபன் ஸ்மித் இரட்டைச் சதம் பெற்று அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான ஸ்மித். 

அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டத்தையும், இரண்டாவது இன்னிங்ஸில் 142 ஓட்டத்தையும் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்தது. 

இதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்களை எடுத்து மீண்டும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார். 

ஆனால் அந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் தலையில் காயம்பட்டு விளையாட முடியாத நிலையை அடைந்தார். 

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்னஸ் அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிய, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.

இந்நிலையில் 4 ஆவது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் மான்சஸ்டரில் ஆரம்பமானது. ஓய்விற்கு பின்னர் மீண்டும் களமிறங்கினார் ஸ்மித். 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடதேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்கஸ் ஹாரிஸ் 13 ஓட்டத்துடனும் டேவிட் வார்னர் டக்கவுட்டுனும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அரை சதத்தை கடந்த மார்னஸ் 67 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.

பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினாலும், இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்மித் மொத்தமாக 319 பந்துகளை எதிர்கொண்டு, 24 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 211 ஓட்டங்களை குவித்தார்.

இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் இவர் பெற்றுக் கொண்ட மூன்றாவது இரட்டைச் சதம் ஆகும்.

எனினும் ஸ்மித் 117.5 ஆவது ஓவரில் ரூட்டின் பந்து வீச்சில் டென்லியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பந்து வீச்சில் இங்கிலந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிரோட் 3 விக்கெட்டுக்களையும், ஜேக் லெச், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ரூட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 10 ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களை குவித்தது.

ஜோ டென்லி 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரோரி பேர்ன்ஸ் 15 ஓட்டத்துடனும், கிரேக் ஓவர்டன் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். 

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.