மன்னார் தோட்ட வெளிப்பகுதியில் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணிக்கத்தின் அனுமதியுடன் பெருமளவிலான மண் அகழ்வு நடவடிக்கைகள் தற்போதும் இடம் பெற்று வருவதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் இடம் பெற்று வருகின்ற மண் அகழ்வை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் ஜனாதிபதிக்கு இன்று வெள்ளிக்கிழமை  அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குப்பட்ட தோட்ட வெளிப்பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பு என்பதன் பெயரில் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.

எனினும் குறித்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு மன்னார் பிரதேச சபையிடம் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் முன்னைய காலங்களிலும், இறுதியாகவும் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் மன்னார் தீவிற்குட்பட்ட பகுதிகளில் மண் அகழ்வு முற்றாகத் தடை செய்யப்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தோட்ட வெளிப்பகுதியில் மண் அகழ்வில் ஏற்பட்ட பள்ளங்களில் நீர் தேங்கி இருந்ததன் காரணமாக அண்மைக்காலத்தில் இரண்டு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததுடன் தேங்கியிருந்த நீரில் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் காணப்பட்டது.

குறித்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக மண் அகழ்விற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மன்னார் பிரதேச சபையின் மக்கள் பிரதி நிதிகளுக்கான 9 ஆவது மாதாந்த சபைக்கூட்டத்தில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் முற்றாக மண் அகழ்விற்குத் தடை செய்வது என அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாகத் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மன்னார் பிரதேச சபையினால் தெரிவிக்கப்பட்டும், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அனுமதியுடன் பெருமளவிலான மண்ணகழ்வு நடவடிக்கைகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றது.

புவியியல் ரீதியாக மன்னார் மாவட்ட தீவுப்பகுதி நிலப்பரப்பானது கடல் மட்டத்தை விடத் தாழ்வாகக் காணப்படுவதினால் எமது மாவட்ட மக்களின் நலன் கருதி இம்மண் அகழ்வினை தடை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் வன்னி மாவட்ட அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் உரியத் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.