இலங்கை கடற்­ப­டை­யி­னரால் மாதகல் கடலில் வைத்து இந்­தி­யா­வுக்கு கடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த நிலையில் கைப்­பற்­றப்­பட்ட 45 கிலோ தங்­கத்தில் 8 கிலோ தங்கம் மாய­மா­னது குறித்து நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

குறித்த 45 கிலோ தங்­கத்தை கடற்­ப­டை­யினர் சுங்­கப்­பி­ரி­வி­ன­ரிடம் கைய­ளித்த பின்னர் 12 மணித்­தி­யா­லத்­திற்குள் அதில் 8 கிலோ தங்­கத்­தினை மீள எடுத்துச் சென்­ற­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி வடமேல் கடற்­படை புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்த தக­வலின் படி 45.03 கிலோ தங்கம் மாதகல் கடலில் வைத்து படகு ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.

அந்த தங்­க­மா­னது மறுநாள் சுங்­கப்­பி­ரி­வி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே அப்­போ­தைய கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் எஸ்.என்.ஜே.பெரேரா சுங்கப் பணிப்­பாளர் நாய­கத்­திற்கு கோரிக்கை கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்ள நிலையில் தங்க புத்தர் சிலை ஒன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்தில் 8 கிலோ­வினை மீளக் கோரி­யுள்ளார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அதனைக் கோரு­வ­தா­கவும் அக்­க­டி­தத்தில் அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து 8 கிலோ தங்கம் மீள வழங்­கப்­பட்­டுள்­ளது. சுங்­கப்­பி­ரிவின் பொறுப்பில் எடுக்­கப்­படும் எந்தப் பொருளும் 30 நாளுக்கு முன் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் விடு­விக்­கப்­பட முடி­யாது என சுங்க கட்­டளைச் சட்டம் குறிப்­பிடும் நிலை­யி­லேயே கைப்­பற்­றப்­பட்டு 24 மணி­நே­ரத்­திற்குள் இந்த தங்கம் மீள­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. எனினும் இந்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தெரியாத நிலையிலேயே நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.