சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளித்த தமிழ் முஸ்லிம் சமூகம் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சீ பிரீட்ஸ் தனியார் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில்  கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு குழு தெரிவு இடம்பெற்ற  பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்தில் கடந்த  யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்ததாக பல வகையான குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடம் பலரும் முன்வைத்துள்ளார்கள். ஆனால் அதற்கான சான்றுகள் இல்லாமலே குற்றச்சாட்டுக்களை அரசியல் ரீதியாக அவர்கள் முன்வைக்கின்றனர்.வடகிழக்கு மாகாண மக்கள் கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய இராணுவ தளபதியை  ஆதரித்தார்கள்.

அதே போன்று எமது ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவினையும்  வடகிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள்  என்பதற்கு மாற்றுகருத்து இல்லை.இதில்  முஸ்லிம் கட்சிகள் அரசியல் ரீதியாக எமது வேட்பாளர் மீது முன்வைக்கும் போலியான   குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டாம். 

இந்த காலம் நவீன ஊடக காலமாகையினால் எவரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தற்போது தமிழ் பேசும்  மக்கள் நடப்பு அரசாங்கம் மீது அதிருப்தியிலுள்ளனர். முஸ்லிம் கட்சிகள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை  எல்லா முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பலரும் அறிவார்கள்.இவ்வாறான கட்சிகள் வேட்பாளர்  கோத்தாபய  ராஜபக்ஷ மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டிற்கு எதுவித ஆதாரங்களும் இல்லை.எனவே எமது முஸ்லிம் தமிழ் மக்கள் முன்னரை விட அரசியலில்  தெளிவாக உள்ளதை தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.