(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாட தமிழ் முஸ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும்.

இம்முறை எந்த வேட்பாளரும் பெரும்பான்மையை பெறும்வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் அதனை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை மக்களே இருக்கப்போகின்றனர். 

அதனை பயன்படுத்திக்கொண்டு எமது இலக்குகளை அடைந்துகொள்ள முன்வரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றபோது ஜனாதிபதி வேட்பாளருடன் எமது கோரிக்கைகள் தொடர்பில் பேசமுடியாத சூழல் இருந்தது.

ஆனால் இம்முறை அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குறிப்பாக அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு புரிந்துணர்வுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என இதன்போது தெரிவித்தார்.