உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் பேஸ்புக் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த 13.3 கோடி பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்களும், ஒரு கோடியே 80 லட்சம் இங்கிலாந்து பயனாளர்களின் எண்களையும், வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் இணையத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேஸ்புக் ஐடியுடன் (Facebook ID) அவர்களது தொலைபேசி இலக்கங்களும் வெளியாகியிருப்பதாகவும், இதன் மூலம் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள்ளவும், சிம் இடமாற்று மோசடி (SIM swap scam) ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தி ஹேக்கில் இருந்து செயற்படும் இலாப நோக்கற்ற அமைப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் இணையங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் சில தொலைபேசி இலக்கங்களுடன் அவரது நாடு, பாலினம், பெயரும் இடம்பெற்றிருந்ததாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

மேலும், பேஸ்புக் தரப்பில் இது பழைய தகவல்கள் என்றும், தற்போது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. ஏற்கெனவே பாதுகாப்புக் குளறுபடிகளில் ஜம்பவான் என்று பெயர்பெற்ற பேஸ்புக், தற்போது மீண்டும் பாதுகாப்பு விதிமீறலை ஏற்படுத்தி சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது.