(இராஜதுரை ஹஷான்)

இரு பிரதான அரசியல் கட்சிகளையும் நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழல் மோசடி , முறையற்ற  அரசியல் செயலொழுங்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்விரு கட்சிகளும் ஆதிக்கம்செலுத்தி வருகின்றது.

நாட்டு மக்களே அரசியல் ரீதியில் புதிய திருப்புமுனையினை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்களாணையினை  மதிக்க வேண்டும் என்பதற்காகவே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். 

ஆட்சி மாற்றத்தின் நோக்கம் வெற்றிப்பெறவில்லை. தேசிய நிதி மோசடியாளர்களை தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்திலே  மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி உள்ளிட்ட மோசடிகள் இடம் பெற்றன.

தற்போது  ஐக்கிய தேசிய கட்சியின் மோசடிகளை தமது அரசாங்கத்தில் வெளிக் கொண்டுவருவதாக பொதுஜன பெரமுனவினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

 கட்சியின் பெயரில் மாத்திரமே மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கடந்த அரசாங்கமே மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது. ஆகவே இரண்டு தரப்பினரும்  ஒருபோதும்  தேசிய நிதி மோசடியாளர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.