(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

2025ஆகும்போது ஏற்றுமதி வருமானத்தை 28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதே எமது இலக்காகும். அதற்காக ஏற்றுமதி பொருட்களை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக பொருளாதாரம் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க, சீன வர்த்தக யுத்தம் காரணமாக உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எமது ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த லாபத்தை பெற்றுக்கொடுக்க முடியுமாகி இருக்கின்றது. இந்த வருடத்தின் கடந்த 7மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 9.5 டொலர் பில்லியனாக இருக்கின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக  ஏற்றுமதி வருமானத்தில் குறைவு ஏற்பட்டிருந்தபோதும் தற்போது அது சரிசெய்யப்பட்டிருக்கின்றது.

அதனால் வருட இறுதியில் ஏற்றுமதி வருமானத்தை 18.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என அவர்  தெரிவித்தார்.