(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ள மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்படி திட்டத்தின் மக்கள் பயன்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன?  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2 ன் கீழ் அவர் இந்த கேள்விகளை எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், 

இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டதும் எனக் கூறப்படுகின்ற ‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சியின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது. 

ஏற்கனவே இந்தக் கண்காட்சி மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், மேற்படி கண்காட்சிகள் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன. 

இத்தகைய நிலையில், யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள மேற்படி கண்காட்சி தொடர்பிலும் தற்போது சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.