இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந் நிலையில் நேற்றைய தினம் மான்சஸ்டரில் தொடரின் நான்காவது போட்டி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம்புகுந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் பெரிதாக கைகொடுக்கவில்லை. 

டேவிட் வோர்னர் டக்கவுட்டுடனும், மார்கஸ் ஹாரிஸ் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 28 ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது அவுஸ்திரேலியா.

எனினும் இதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஸ்சேன் ஜோடி தடுமாறிய அணிக்கு புத்தெழுச்சி அளித்தது. 

இவர்கள் இருவரும் இணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்களை எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. 

மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கிய போது லபுஸ்சேன் தொடர்ச்சியாக 4 ஆவது அரைசதத்தை கடந்தார்.  எனினும் ஓட்ட எண்ணிக்கை 144 ரன்களை எட்டிய போது அவர் 67 ஓட்டத்துடன் கிரேக் ஓவர்டனின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் டிராவிஸ் ஹெட் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை பெய்தது.

அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் சுமித் 60 ஓட்டத்துடனும், டிராவிஸ் ஹெட் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிரட் 2 விக்கெட்டுக்களையும், கிரேக் ஓவர்டன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.