இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இலங்கை கிரக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் இரு போட்டிகளை நியூஸிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந் நிலையில் மூன்றாவது போட்டி நாளை மறுதினம் பல்லேகல மைதானத்தில் ஆரம்பாகவுள்ளது.

இதேவளை நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் உபாதைக்குள்ளானதன் காரணமாக இப் போட்டியில் விளையாட மாட்டார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய போட்டியில் நியூஸிலந்து அணி துடுப்பெடுத்தாடும்போது இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் வெற்றிக்கு என்ற நிலையிருந்தது. இறுதி ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வணிந்து அஷரங்க முதல் இரு பந்துகளில் இருவரை ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

இதன் பின்னர் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட மிட்செல் சாண்டனர், அந்தப் பந்தை உயர்த்தியடித்தபோது பெளண்டரி எல்லை அருகில் உயர்ந்து சென்றது. 

குறித்த பந்தை குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் பிடியெடுக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், செஹான் ஜயசூரிய பந்தை பிடியெடுத்தார். எனினும், இவர்கள் இருவரும் கடுமையாக மோதி மைதானத்தில் விழுந்தனர். இதில், செஹான் ஜயசூரிய பந்துடன் பௌண்டரி எல்லையை தொட்டதால், நியூசிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எனினும், கடுமையான உபாதைக்கு முகங்கொடுத்த இருவரும், மைதானத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் வெளிய அழைத்துச் செல்லப்பட்டனர். 

இந்த நிலையில், தற்போது அவர்களின் உபாதைகள் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டுள்ள கிரிக்கெட் சபை, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள போட்டியில் இவர்கள் விளையாட மாட்டார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. 

குசல் மெண்டீஸ் முதல் இருபதுக்கு - 20 போட்டியில் 53 பந்துகளுக்கு 79 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 24 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை பெற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல நிலையில் உள்ளார். 

அதேபோன்று இறுதிப் போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி செஹான் ஜயசூரிய 13 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந் நிலையில் இந்த அறிவிப்பானது இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.