(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில், ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ தொடர்ந்தும் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் வழங்காது செயற்பட்டு வருவதால், அவரிடம் வாக்கு மூலம் பெற நீதிமன்ற உத்தரவொன்றினை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இன்று சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே நீதிவான் இந்த ஆலோசனையை வழங்கினார்.

குறித்த விவகார வழக்கு விசாரணை ஆரம்பமான போது,  விளக்கமறியலில் உள்ள சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

 விஷேட மேலதிக அறிக்கை ஒன்ரை மன்றில் சமர்பித்த விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா,

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரனி சவேந்ர சில்வா தொடர்ந்தும் வாக்கு மூலம் வழங்காமல் உள்ளதால் விசாரணைகளை முடிவுறுத்த முடியாமல் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்துடன் சந்தேக நபரான நேவி சம்பத்தை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.