வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

பெரும் சர்ச்சைகள் நிறைந்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இம் முறை பெங்கல் விழா இன்று 4 ஆம் திகதி ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று 13 ஆம் திகதி பௌர்ணமி இன்று நிறைவு பெறவுள்ளது.

ஆலயத்தின் பிரதான பூசகர் மதிமுகராசா தலைமையில் இன்றைய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அன்னதானமும் சிறப்பாக இடம்பெற்றது.

இன்றைய தினமும் வழமை போன்று நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் திருவிழாவின் போது பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒலிபெருக்கி பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு செல்லும் வீதி செப்பனிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கழிவுப்பொருட்களை எரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டதுடன் தேவையின் பொருட்டு மரங்களில் தடிகளை வெட்டவும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் பல தடவைகள் சென்று பொங்கல் நிகழ்வினை பார்வையிட்டு செல்வதாகவும் இது அங்கு வருகை தரும் பக்கதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.