(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் வீடமைப்பு அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பாக எனக்கு அறிவித்தால் உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடி  அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 

பிரதமரிடம் கேள்விகளை எழுப்பிய சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி கூறுகையில், 

" வீடமைப்பு நிர்மானத்துறைகள் மற்றும் கலாச்சார அமைச்சின் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மன்னார் , வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம திட்டம் மக்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்ற  நிலையில் நீண்ட காலமாக மாதிரி கிராம வீட்டுத்திட்டங்கள் பலவற்றுக்கு எந்தவித நிதியும் வழங்கப்படவில்லை, 

பல வீட்டுத்திட்டங்களுக்கு குறுகியளவிலான நிதியே வழங்கப்பட்டுள்ளது. என்பதனை பிரதமர் அறிவாரா? அந்த நிதியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமா? வீடமைப்பு அதிகார சபையினால்  2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா  வீடமைப்பு திட்டத்தில் 2 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.

 இன்று பல திட்டங்களுக்கு எந்தவித பணமும் கொடுக்கப்படுவதில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.