தென் கிழக்கு யேமனிய துறைமுக நகரான முகல்லாவில் இன்று காலை தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் படையணிக்கு புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளனர்.

கடந்த மாதம் மேற்படி நகரை பொலிஸார் மீளக் கைப்பற்றியிருந்த நிலையில் அந்நகரின் புறநகரப் பகுதியிலிருந்த பொலிஸ் ஆட்சேர்ப்பு நிலையத்தில் பெருமளவானோர் புதிதாக பொலிஸ் படையணியில் இணைந்து கொள்ள வரிசையாக காத்திருந்த போது, அவர்கள் மத்தியில் பிரவேசித்த தற்கொலைக் குண்டுதாரி தனது குண்டுகள் பொருத்தப்பட்டிருந்த பட்டியை வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

புவாஹ் மாவட்டத்தில் இடம்பெற்ற மேற்படி தாக்குதலில் 60 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வார காலப் பகுதியில் இது இரண்டாவது தடவையாகும்.

தமது தீவிரவாத குழுவைச் சேர்ந்த அபு அல் பரா அல் அன்ஸாரி என்பவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.