இலங்கையின் வடபகுதி தமிழர்கள் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியுஸ் இன் ஏசியாவிற்கு தெரிவித்துள்ளார்.

 2009 இல் ஐந்தாவது ஈழப்போரின்  கொடுரமான இறுதி தருணங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு அவ்வேளை பாதுகாப்பு செயலாளராகயிருந்ததன் காரணமாக  காரணமாக கோத்தபாய ராஜபக்சவே காரணம் என தமிழர்கள் கருதுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை முழு தமிழ்மக்களிற்கும் ஏற்பட்ட அவமானம் என வடக்கு  தமிழ் மக்கள் கருதுகின்றனர் என அவர் நியுஸ் இன் ஏசியாவிற்கு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தப்போவதாக கோத்தபாய ராஜபக்ச அளித்துள்ள வாக்குறுதி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியை விட அதிகார பகிர்வு குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் நாட்டம் கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயத்தில் வடக்கு தமிழர்களிற்கும் கிழக்கு தமிழர்களிற்கும் இடையில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பிரச்சினைகள் உள்ளன, முஸ்லீம்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில கிழக்கு மாகாண தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவை வேறுவிதத்தில் நோக்குகின்றனர்,கோத்தபாய ராஜபக்ச முஸ்லீம்களிற்கு எதிரானவர் என கருதப்படுவதால் அவர் முஸ்லீம்களின் நடவடிக்கைகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என அவர்கள் கருதுகின்றனர் எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தமிழர்களில் சில பிரிவினராவது கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கியதேசிய கட்சி எவரை வேட்பாளராக நிறுத்தினாலும் பெருமளவு தமிழர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சியொன்று போட்டியிடாத தருணங்களில் தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விட ஐக்கியதேசிய கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்ற தேர்தல்களில் கிழக்கு மாகாண  மக்கள் ஐக்கியதேசிய கட்சிக்கே  வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்களை பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  ரணில் விக்கிரமச்சிங்க புதிய அரசமைப்பு குறித்த பிரச்சினைக்கு தீர்வை காணமுயன்றுள்ளதுடன்  நகல்வடிவத்தையும் சமர்ப்பித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஒருமித்த நாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டார்,ஆனால் கோத்தபாயவும் சஜித்தும் இதற்கு மாறாக ஒற்றையாட்சி முறையையே வலியுறுத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் மாகாணங்களிற்கான அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படாத ஒற்றையாட்சி தீர்வையே ஆதரிப்பதாக தெளிவாக தெரிவித்துள்ளனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.